செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்

 
 
  மகிந்தவின் இந்தியப் பயணம் ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அவமானம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் அரச தலைவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுவரும் இவ்வேளையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்திய நாட்டுக்குள் வரவேற்றுள்ளது ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிகழ்காலத்தில் நடக்கும் அறியாமைகள் எதிர்காலங்களில் பல்வேறு எதிர்வினைகளை உண்டுபண்ணுவதுடன், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும். இதுவே வரலாறாகி பல நூறு ஆண்டுகள் நிலைத்துவிட வழிகோலப்படும்.நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் தக்க தருணத்தில் தேவையான காய்நகர்த்தல்களை இந்திய அரசு செய்திருந்தால் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பற்றியிருக்கலாம்.
கலைஞர் தனக்கு வந்த பாணியிலேயே பேசியும் வந்தார். நிபந்தனைகளை விதித்து காலைவாரி விடும் பரம்பரையில் தான் வந்தவர் இல்லை என்று அடிக்கடி கூறி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவினை வழங்கியே வருகிறார். மிரட்டிப் பார்ப்பதும், பின்னர் கைவிடுவதும் கைவந்த கலையாகி விட்டது கலைஞருக்கு.
ஈழத் தமிழர்கள் மீது ஏதோ தானேதான் அதீத கரிசனை கொண்டுள்ளவர் போன்று பல அறிக்கைகளை தொடர்ந்தும் சமீப மாதங்களில் விட்டுக்கொண்டு வரும் கலைஞர், இந்திய மத்திய அரசு செய்யும் காரியங்களை எள்ளளவேனும் நிறுத்த வழி செய்யும் வலிமை இருந்தும்கூட வாய்ப்பேச்சில் வீரரடி என்கிற பாணியிலையே செயற்படுகிறார்.
சிங்கள இரானுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று போராடும் அனைத்துத் தமிழக அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் உணர்வுகளையும் மீறி இந்திய நடுவண் அரசு 400-க்கும் அதிகமான சிங்களப் படையினருக்குப் பயிற்;சி அளிப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரே இந்தியப் பாராளுமன்றத்தில் கூறுகிறார். தமிழகத்துக்கு விளையாட வந்த விளையாட்டு வீரர்களையே தமிழகத்தை விட்டு அனுப்பினார் தமிழக முதல்வர். இப்படியான கொந்தளிப்பு நிலையே காணப்படும் இன்றைய நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்
சில அற்ப காரணங்களுக்காகப் போராட்டங்களைச் செய்து வெற்றிகளை அடைகிறார்கள் பல இந்திய மாநிலத் தலைவர்கள். அப்படியிருக்கையில்,தமிழகத்தின் உயிரிலும் மேலான உணர்வுப் பிரச்சினையான தமிழீழத் தமிழர் பிரச்சினையை இந்திய நடுவண் அரசு மதிக்காமல் செயற்படுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் அவமரியாதையே. தமிழர்கள் என்றால் அடிவாங்கி ஓடும் இனம் என்கிற கருத்தையே இந்திய மற்றும் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் வைத்துள்ளன.
யூதர் ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது சீனத்தவருக்கு மற்ற இனத்தவர் அடித்தாலோ ஒட்டுமொத்த யூதரோ அல்லது சீனரோ துணைக்கு வந்துவிடுவார்கள். இதன் காரணமாக இன்று யாரும் யூதரையோ அல்லது சீனரையோ தொட அஞ்சுகிறார்கள்.இதைப் போன்று பல நூறு சம்பவங்களை உலகம் பூராவும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் வாழும் பல்வேறு இன மக்களும் தங்கள் தேசிய அடையாளங்களுடன் ஒற்றுமையாக இணைந்து வரும் இக்காலத்தில் இந்திய நடுவண் அரசு தமிழர்களை ஒற்றுமைப்பட விடாமல் செயற்படுகிற வேலைகளேயே செய்கிறது.
தன் தேசத்தில் வாழும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயற்படும் இந்திய நடுவண் அரசை ஆதரித்து இந்திய இறையாண்மைக்குள்ளேயே தாமும் வாழுவதாகத் தமிழக மக்கள் தொடர்ந்தும் கூறுவேர்களேயானால் தமிழினம் என்றுமே சோரம் போகும் இனம் என்ற கணிப்பில் இந்திய நடுவண் அரசென்றாலும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலத்தவரானாலும் தமிழகத்தேயே மதிக்காமல் போகும் காலம் வெகு தொலைவிலில்லை.
தமிழீழ மக்களைக் காப்பாற்றும்படி கூறி மானமுள்ள பலர் தீக்குளித்துச் செத்தார்கள். செத்தாவது தமது இனத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று மாண்டுபோனவர்களின் கனவுகளை இந்திய நடுவண் அரசு ஒரு பொருளாகவே எடுத்துக்கொள்ளவில்லை.செத்தால் என்ன இவர்கள் தமிழர்கள்தானே என்கிற நினைப்பே இந்திய நடுவண் அரசுக்கும், அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இருந்து வருகிறது.
தாமே தமிழினத் தலைவர்கள் என்று கூறிவரும் தலைவர்கள் தமது இனத்தைக் காட்டிகொடுக்காமல் இருந்தாலே போதும் மற்ற இனத்தவர்கள் தமிழினத்தின் மீது மரியாதை வைத்துச் செயற்படுவார்கள். எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் தலைமைகள் இருக்கும் இனத்தை எப்படித்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்கிற கேள்வியே அனைவர் மனங்களிலும் எழுகிறது.
தமிழர்களை அழித்தவர்களுக்கு விருந்தாம்!
அனைத்துத் தமிழகக் கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தது இந்திய அரசு. திட்டமிட்டவாறே 4-நாள் பயணமாக செப்டம்பர்19-ஆம் தேதியன்று மகிந்த டெல்லி சென்றடைந்தார். இந்தியாவின் தலைவர்களைச் செப்டம்பர்20-ஆம் தேதியன்று சந்தித்ததுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன் அவர் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டார் மகிந்த.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச தரத்திலான புத்தமத மற்றும் அறிவுசார் பட்டப்படிப்புக்களை கற்பிக்கவிருக்கும் தர்ம தம்ம பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்க சிறிலங்காவின் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், இம்மாநிலத்தை ஆளுவது பாரதிய ஜனதா தளம். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் அனுமதியின்றி இந்திய நடுவண் அரசு செயற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் தீங்குகளையே விளைவித்து வருகிறார்கள் என்பது இதிலிருந்து நன்கே தெரிகிறது.
தமிழகத்தில் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியதும், சவுகானின் ஒப்புதல் பெறாமல்;தான் இந்திய நடுவண் அரசு மகிந்தாவை வரவழைத்துள்ளது என்று பா.ஜ.கட்சியினர் கூறி வருகிறார்கள். வை.கோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேசம் சென்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேச எல்லையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க, தே.மு.க, நாம் தமிழர் கட்சிஇ தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து, மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,“ராஜபக்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.கவும் அங்கம் வகிக்கிறது. தி.மு.கவைப் போல மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாட்டைக் கண்டித்து மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்.அதுபோல, ராஜபட்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தும் சக்தி கருணாநிதிக்கு உள்ளது.ஏனெனில் மத்திய அரசின் அழைப்பின் பேரில்தான் ராஜபக்ச இந்தியா வருகிறார். ராஜபக்ச வருகையைத் தடுத்து நிறுத்த அவர் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர் மத்திய அரசிலிருந்து விலக வேண்டும்" என்றார் ராதாகிருஷ்ணன்.
யார் சொன்னாலென்ன நமது வேலைகள் நமது குடும்ப நலன்களுக்காக நடந்தால் திருப்தியே என்கிற மனநிலையில்;தான் கலைஞர் இன்றும் இருக்கிறார். ஏமாற மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.கலைஞர் நன்கே மக்களின் தகைமைகளை அறிந்து செயல்படுகிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தமிழினம் செய்த பாவம் என்னவெனில் தன்னலம் கருதாத சிறந்த தமிழ்த் தலைவர்கள் இப்போது நம்மிடம் இல்லையென்பதே. எதையாவது கூறிவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகக் கலைஞர் போன்ற தமிழகத் தலைவர்களினால் செய்யக் கூடிய வேலையை தேவையில்லாமல் பிரச்சாரப்படுத்தி தமிழர்களுக்கு இன்னும் அவப்பெயரை உண்டுபண்ணும் வேலைகளை நிறுத்துவதே தமிழர்களுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்.
செப்டம்பர் 17-ஆம் தேதியன்று சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ சாரதி மகிந்தவின் இந்தியப் பயணத்தை எதிர்த்துத் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார். “ஆடி ஓடித் திரிந்தவன் இன்று பிணமாகக் கிடக்கிறானே...ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் சோனியா, மன்மோகன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறுகிறார் மரணித்தவரின் தந்தை தங்கவேல்.
இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்ச இந்திய தேசத்துக்குள் கால் வைக்கக் கூடாது" என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு,தான் கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார்.அதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிப்போய் அணைத்தார்கள். கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
தமிழினத்தையே சம்ஷாரம் செய்து அழித்த சிங்களத்தின் அதிபர் மகிந்தவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஒரு மதத்தின் போதனையை அளிக்கவிருக்கும் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் செய்ததன் மூலமாக அது இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத வடுவை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தமிழர்களின் சதையை வெட்டி ரசித்த கொலைகாரர்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் துவம்சம் செய்தவர்களுக்கும், பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரக்கர்களுக்கும் இந்தியாவின் மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் அழைத்து மதிப்பளித்துள்ளதானது நிச்சயம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, புத்தர், காந்தி பிறந்த தேசத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள செயலாகும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
Download As PDF

21 கருத்துகள் :

கும்மாச்சி சொன்னது…

மிகவும் கேவலமான நிகழ்வு, நமது தமிழ்நாட்டு அரசியால்வாதிகள் தமிழர் நலம் என்று சொல்லிக்கொண்டு காலம் காலமாக நம்மை எமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ADMIN சொன்னது…

என்ன செய்ய.. தமிழர்களின் உணர்வுகள் இங்கு ஒடுக்கப்பட்டே உள்ளது..!!!

எதிர்த்து குரல்கொடுக்கும் அரசியல் சக்திகளும், தமது குடும்பம், தமது சொந்தங்கள், தமது உற்றார் உறவினர் இந்த வட்டத்திலேயே சுற்றி சுற்றி ஒரு சுயநல உணர்வில்தான் அரசியல் நடத்துகிறார்கள்....!!

சமீபத்தில் அரங்கேறிய அரசியல் நாடங்களை நாடே அறியும்.. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் இவ்வாறான கொடூரங்களை வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிகிறது..

காரணம் தன்னலம்.. !!! தன்னலமே..!!!

எந்தக் கட்சியாக இருக்கட்டும்.. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் தினம்தோறும் கேவலமான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.. ஒவ்வொரு கட்சியும் முழுதும் ஐந்தாண்டுகள் ஆட்சிப்பீடத்தை நிலைநிறுத்துவதிலேதான் குறியாக இருக்கிறது..


இவர்களுக்கு தமிழர்கள் படும் பாடு எங்கே தெரியப்போகிறது.. தன் வீட்டுப்பிள்ளைகள் இப்படி சதையும் பிண்டமுமாக பிய்த்தெரியப்பட்டு குத்துரியரும் குலையுயிரமாய்க் கிடந்தால் அவர்களுக்கு உறைக்கும்..

யாரோ பெற்ற பிள்ளைகள்தானே.. இவர்களுக்கென்ன அக்கறை வந்தது?

ஆட்சியில் காட்சி மாற்றங்கள் அவ்வப்போது அரங்கேறும்..

தமிழனுக்கும், தமிழுக்கும் எப்போதுமே முன்னேற்றம் என்பதும், பாதுகாப்பு என்பதும் வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கும்...

என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை இது.. !!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்ம அரசியல்வாதிகளுக்கு எப்போது தான் புத்தி வரப்போகுதோ...?

MARI The Great சொன்னது…

தமிழனுக்கு ஆளவும் தெரியாது..அத்திரப்படவும் தெரியாது அதுதான் பிரச்சனையே!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ம்..

Admin சொன்னது…

என்னங்க பண்றது..போராட்டத்தோட வீரியம் பத்தலைன்னு நினைக்கிறேன்..

விழித்துக்கொள் சொன்னது…

தமிழனுக்கு ஆளவும் தெரியாது..அத்திரப்படவும் தெரியாது அதுதான் பிரச்சனையே!
surendran

CS. Mohan Kumar சொன்னது…

:(((

சாய்ரோஸ் சொன்னது…

இங்கே என்ன கூக்குரலிட்டாலும் சினிமாக்களிலும், கிரிக்கெட்டிலும், டி.விக்குள்ளும் புதைந்து கொண்டு சொரணை கெட்டுப்போய் கிடக்கும் இனத்துக்கு எதுவும் உரைக்கப்போவதில்லை. எவர் தீக்குளித்தாலும் அது இங்கே வெறும் செய்தி மட்டுமேயொழிய எவர் உணர்வும் பொங்குவதில்லை. தமிழினத்தை அழித்த போரையே தமிழக அரசியல் கட்சிகள் வெறுமனே அரசியலாக முடித்துக்கொண்டது. இந்திய அரசு அந்தப்போருக்கு முழு ஆதரவு வழங்கி ஆசீர்வதித்தது. அதாவது பரவாயில்லை... சொந்த நாட்டு மீனவர்கள் மீது நடக்கும் அக்கிரமங்களைக்கூட மகிந்தாவுக்காக உளமகிழ்வோடு ஏற்றுக்கொண்டது. எந்த நிகழ்வுகளிலும் சொரணை கெட்டுப்போன இந்திய அரசும், தமிழக கட்சிகளும், தமிழர்கள் நாமும் இப்போது ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை தலையாய பிரச்சினைபோல பேசிக்கொண்டிருக்கிறோம்!!! அட போங்க பாஸ்... இங்கே யாருக்கும் வெட்கமில்லை. யாருக்கும் இன உணர்வில்லை, யாருக்கும் துளியளவுகூட மனதில் உறுத்தலில்லை, எல்லாம் முடிந்தபிறகு ராஜபக்சே இனி இந்தியாவுக்கு வந்தால்தான் என்ன ஆகப்போகிறது. இல்லை வரமால் போனால் மட்டும் என்ன ஆகப்போகிறது. ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் தண்ணீர் தெளித்து விடப்பட்ட மீனவர்களுக்கும் இனி விதிவிட்ட வழிதானேயொழிய... இனியொரு சேகுவாராவோ, பிரபாகரனோ தோன்றப்போவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை... வேண்டுமானால் டி-சர்ட்டுகளிலும், போஸ்டர்களிலும் வெட்கமில்லாமல் இவர்கள் படங்களை போட்டுக்கொண்டு திரியலாம்!!!

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நம் நாட்டில் அரசியல் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாகும்.......பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown சொன்னது…

இதைவிட தெளிவாக இப்பிரச்சனையை யாரும் எழத இயாலாது. ஆனால் பலன் எள்ளவும் இவர்கள் பதவியல்உள்ளவரை கிடைக்காது

உண்மைகள் சொன்னது…

நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ஞாபகம் வச்சி தீர்த்து கட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில் அறுநூறு ஆண் யூதர்களை கொன்று அவர்களது குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக விற்றிருக்கிறார்.

நித்யானந்தா அடிமை வியாபாரம் செய்யவில்லை. அடிமைகளை வாங்கவும் இல்லை. மற்றவர்களை அடிமைகளாக்கி விற்கவும் இல்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு ஊரை கொள்ளையடிப்பது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று அங்கிருக்கும் செல்வங்களை அபகரிப்பது. அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்று காசு பண்ணுவது.

நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.

குட்டன்ஜி சொன்னது…

வேதனை!

P.S.Narayanan சொன்னது…

அடிமைகளாக இருப்பதே சுகம் என்று நினைப்போர் தமிழர்களில் அதிகம். பேச்சுமட்டும் வானளாவியது. செயல் சுழியம். கூடங்குளம் தவிர வேறு ஒரு போராட்டம், ஊகூம். தலைவர்களின் பேர் சொல்வதே தவறு என்று கருதும் இனம். பட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. குப்பைத்தனமான சினிமா, ஒப்பாரி சீரியல், கழகங்கள், தினத்தந்தி, எழவு சேதி பார்க்க தினமலர், டாஸ்மாக்: இவை நமது தரத்துக்கான அக்மார்க். திமிருக்கு மட்டும் குறைவில்லை. காலில் விழுவது, கண்மூடித் தனமான போஸ்டர் கலாசாரம், நினைத்தபோதெல்லாம் தீக்குளியல். ஐயகோ நெஞ்சு பொறுக்குதிலையே. அறிவுபூர்வமாக எப்போது வாழப்போகிறோம்?

ராஜ நடராஜன் சொன்னது…

இந்திய காங்கிரஸ் அரசு தமிழர்களை சீண்டுவது ஒன்றையே முக்கியமாக கருதுகிறதென்பது வெள்ளிடை மலை. மாற்றாக பி.ஜே.பி யாக இருக்குமா என்ற நம்பிக்கையும் ராஜபக்சே சாஞ்சி அடிக்கல்லில் தமிழர் அடி கல்லாக மாறிவிட்டது.அகிம்சையை பற்றி பேச ஆள் கிடைத்தான் பாருங்கள்:(

இந்தியாவின் இலங்கையுடனான வெளிநாட்டுக்கொள்கை தோல்வி என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது ???? - மத்திய அரசு அண்டை நாடான இலங்கையின் மிது எவ்விதத் தடையினையும் விதிக்க இயலாமையினால் - பல்வேறு காரணங்களினால் - இது மாதிரி நடந்து கொள்கிறது. அயல் நாடுகள் பற்றிய கொள்கைகள் மாற வேண்டும். மாறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம். நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

ராஜி சொன்னது…

தமிழர்களை அழித்தவர்களுக்கு விருந்தாம்
>>
இன்னா செய்தாரை ஒறுத்தல்ன்ற குறளுக்கு தக்கப்படி நாங்க நடந்துக்குறோம். உங்களுக்கு என்ன சார் வந்துச்சு??!!

srinivasan சொன்னது…

ராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? நாளைய பற்றிய கவலை ?என்று சாமானிய மக்கள் எல்லோரும் அரசியல் கட்சிகள் பார்த்து கொள்ளட்டும் என்று இருக்கிறார்கள் ,அரசியல் கட்சிகள் தமது சொந்த நலன்களை மட்டுமே கவலை கொள்கிறது.

மாலதி சொன்னது…

தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள் கூர்ந்து நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்கவும் நன்றிகளுடன் மாலதி

புரட்சி தமிழன் சொன்னது…

தமிழர்கள் அறைகுறையான புரிதல்கலோடு செயல்படுவதே வேதனை அளிக்ககூடிய விசயம். இலங்கையில் சிறுபாண்மையாக இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் போராடுகிறார்கள். பெரும்பான்மையாக உள்ள இந்திய ( குறிப்பாக ஒரிசா மற்றும் மேற்கு வங்க சின்ஹா இன மக்கள்) சின்ஹாக்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறது. ஆதியில் இருந்து இலங்கையில் இருந்த தமிழருக்கு ஆதரவளித்து பாதியில் வந்த இந்தியர்களுக்கு எப்படி பாதகம் செய்யும். தமிழா இந்தியா உண்ணை காப்பாற்றும் என்று ஒருபோதும் பகல்கனவு கண்டிராதே! உன்னை நீதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

மிகவும் வருந்த வேண்டிய விடயம்,.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "