இலங்கை என்கிற நாட்டில் இரு இனங்கள் தனித்தன்மையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இரு இனங்களின் நாடுகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடனேயே சிலோன் என்கிற நாட்டின் பெயரில் ஐக்கியப்படுத்தப்பட்டன. ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பெரும்பான்மை சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்ப் பிரதேசத்தில் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவராக வாழ்கிறார்கள். சிங்களப் பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
சிறிய நாடான தமிழீழத்தைப் பெரிய நாடான சிங்களத்துடன் இணைத்ததன் பின்னர் சிங்கள மக்கள் பெரும்மான்மையாக இருப்பது சாத்தியமே. இதனை மையமாகக் கொண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம், தனக்கே கைவந்த கலையான பிரித்தாழும் தந்திரத்தை கைக்கொண்டது. இதன் விளைவே பல உலகநாடுகளில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப் போராட்டங்கள். குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் தந்திரத்தையே இன்றுவரை பல ஏகாதிபத்திய அரசுகள் செய்து வருகிறார்கள். காலம் தாழ்த்தியாவது சிங்கள அரசின் ஏமாற்றுத் தந்திரப் புத்தியை பிரித்தானியா போன்ற நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன என்பது சற்று மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பர் 16-ஆம் நாளன்று பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டது. பதினெட்டு மாதங்கள் நடத்திய விசாரணையை ஆவலாக எதிர்பார்த்தார்கள் பல உலக நாடுகள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூன்று பேர் அடங்கிய குழு (தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு) பரிந்துரை செய்தவற்றை நிறைவேற்ற வேண்டியவைகள் பற்றி மகிந்தாவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யுமென்று சிறிலங்கா அரசு அறிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட பல மேற்கத்தைய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை தொடர்ந்தும் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்று குரல் கொடுத்து வந்தார்கள். சிறிலங்கா அரசும் இதனை செய்துவிட்டது.
ஆணைக்குழுவின் விடயங்களும் பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமா?
ஆணைக்குழுவின் 407 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையும், பரிந்துரைகளையும் மேலோட்டமாக அலசுவோமாக, அவையாவன:
(1) வேதனைகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போம்;
(2) பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை;
(3) ஆணொருவர் வரம்பு மீறியிருந்தால் விசாரணைக்குட்படுத்த வேண்டும்;
(4) காணொளிக் காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சட்ட, மருத்துவ பிரச்சினைகள் நிலவுகின்றன்;
(5) தவறிழைத்தமை நிரூபணமானால் சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்படும்;
(6) உசிதமான வேளைகளில் மரண அத்தாட்சிப்பத்திரம், நிவாரணங்கள்;
(7) சனத்தொகை நிலைமையை மாற்றியமைக்கும் கொள்கை உண்மைக்குப் புறம்பானது;
(8) அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகளின் அளவு குறைந்துள்ளது;
(9) வடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு;
(10) நாடு முழுவதும் படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர்;
(11) அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்குத் தடை;
(12) காணொளி காட்சிகள் தொடர்பில் சுயாதீனமான புலனாய்வு விசாரணை நடத்தவும்;
(13) சிறு இனக்குழுக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு;
(14) இனப்பிரச்சினைகளுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கு மும்மொழிக் கொள்கை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் எதுவினையும் கொண்டுவரப் போவதில்லை. புண் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். அத்துடன், மற்றவர்களுக்கு குறித்த நோய்க் கிருமிகள் அப்புண்ணிலிருந்து தொற்றிவிடாமல் இருக்க, தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். இது சாதாரண புண்ணுக்கே பொருந்துமென்றால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆறாத வடுக்களைச் சந்தித்திருக்கும் ஈழத் தமிழினத்தின் புண்ணைக் குணப்படுத்த பல வகையான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கே தவிர குறித்த புண்ணை உருவாக்கிய சிங்கள ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது.
குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரை கூறும் செய்தி ஒன்று என்னவெனில், கடந்த கால நிகழ்வுகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக வேண்டுமென்பதே. போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழர்கள் இன்றுவரை எந்தவித அடிப்படை உரிமைகளையும் பெறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெள்ளத்தில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படாத நிலை இன்றுள்ளது. எதிர்கால வளர்ச்சிகளையும், சவால்களையும் எவ்வாறு சந்திக்கலாம் என்று கூறுபவர்கள், துன்பப்படும் மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல் இருட்டடிப்புச் செய்யும் நிலையே இன்று நிலவுகிறது. இத்தோரணையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க முடியும் என்பதே பலரிடத்திலும் எழும் வினா.
ஆணைக்குழுவின் அறிக்கையில் “சனல்-4” தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. வேடிக்கை என்னவெனில், குறித்த ஒளி நாடாக்களை ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பேற்று மரபணுச் சோதனை செய்து குறித்த ஒளி நாடாக்கள் உண்மையே என்று கூறியது. இதைவிட எந்தவகையில், புலன் விசாரணை தேவை என்று குறித்த குழு கேட்கிறதென தெரியவில்லை. ஒருவேளை, குறித்த ஒளி நாடாக்களை இந்தியாவிற்கு அனுப்பினால் தமக்கு சார்பாக சோதனையின் முடிவு வரும் என்று மனப்பால் குடிக்கிறார் மகிந்தா போலும்.
பொது மக்கள் வாழ்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது - யுத்த நடவடிக்கைகளை அமுல்படுத்துவது - குறித்த கொள்கைகளை வகுப்பதில் முக்கிய ஒரு காரணியாக அமைந்திருந்ததென்பதையும் பொதுமக்களின் இடங்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்வது ஒரு போதும் அக்கொள்கையின் ஓரங்கமாக இருக்கவில்லை என்று கூறுகிறது குறித்த அறிக்கை.
அப்படியானால், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சிறார் மற்றும் வயோதிபர்கள் வாழ்ந்த இல்லங்கள், அநாதை மடங்கள் போன்ற இடங்களைக் குறிவைத்து சிங்கள அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல் எதுவுமே சிங்கள அரச படையினருக்கு தெரிந்திருக்கவில்லையா? இதனை சிங்கள அரசு மறைக்குமானால், சிங்கள அரசு மென்மேலும் தமிழ் மக்களின் வெறுப்பிற்கு ஆளாக வேண்டிவரும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உட்பட பல உலக மற்றும் உள்நாட்டு மனித நேய அமைப்புக்கள் பல காலங்களாக குறித்த இடங்கள் குறித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டுமென குரல் கொடுத்தார்கள். அத்துடன், குறித்த இடங்களின் அமைவிடத்தைப் பற்றி சிறிலங்கா அரசிற்கும் மற்றும் படைத்தரப்பிற்கும் வழங்கப்பட்டது. இறுதி யுத்தக் காலப்பகுதியில், பாதுகாப்பு பிரதேசமாக சிங்கள அரசு மற்றும் விடுதலைப்புலிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்கள் மீது குண்டுகளை வீசி பல்லாயிரம் மக்களை கொன்றதை சிங்கள அரசும், குறித்த ஆணைக்குழுவும் மூடி மறைக்க முயல்கிறதா? ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
உலக நாடுகள் என்னதான் செய்யப்போகின்றன?
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. உப்புச் சப்பு இல்லாத, உண்மைக்கு புறம்பான அறிக்கைக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்தார்கள் சில மேற்கத்தைய நாடுகள். அளிக்கப்பட்ட கருமங்களுக்கு மாறாக, தமக்கு சம்பளத்தை வழங்கிய சிங்கள அரசிற்கு விசுவாசமாகவும், விடுதலைப்புலிகளையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் குற்றம் சாட்டியே குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. அடிப்படை விடயங்கள் குறித்து ஆழ விசாரித்து, தக்க நடவடிக்கைகளை எடுப்பதுவே புத்திசாலித்தனம். பிரித்தானியர்கள் சிறிலங்காவிலிருந்து வெளியேறிய காலத்திருந்தே, குறிப்பாக ஆயுதப் போராட்டங்கள் அரம்பிப்பதற்கு முன்பதாகவே தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம் ஆட்சிக்கட்டிலேறிய சிங்கள அரசாங்கங்கள் செய்தன. எனவே பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும், அவைகளுக்கு இறுதியில் என்னவாயிற்று என்பதைப் பற்றியும் விசாரணை வேண்டும். தேவையற்ற ஒரு பயிரை அழிக்க வேண்டுமாயின், அதன் வேரையே பிடுங்க வேண்டும். அதைப் போலவேதான், ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் குறித்த பிரச்சினையின் மூல காரணியை அறிந்து அவற்றை சரிசெய்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் குறித்த அறிக்கையை ஆவலாக எதிர்பார்த்தார்கள். அறிக்கை வந்தவுடன், அதிர்ச்சிக்குள்ளான நாடுகளும் இவைகளே. குறித்த அறிக்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளைக் கொண்டிருக்கவில்லையென்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலாந்த் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நல்லிணக்க அறிக்கையை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை மாத்திரம் அல்லாமல் அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
சிறிலங்காவிற்கான கணேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துக் கூறுகையில், “டிசெம்பர் 16-ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது மிக அவசியமான அரசியல் நல்லிணக்கத்திற்கு முக்கிய பங்களிப்பாகும். அதேவேளை, அறிக்கை மீதான எமது ஆரம்ப, வாசிப்பின்படி, சிறிலங்கப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும்; பாரதூரமான சர்வதேச பிழையான செயல்கள் தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற பார்வைக்கு ஆதரவளிக்கின்றன. இந்த அறிக்கை தொடர்பான பதிலளிப்பை துரிதப்படுத்துமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். முக்கியமான பொறுப்புடைமை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது" என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளன. இதன் பின்னரே அது தொடர்பில் கருத்துக்கூற முடியுமென்றும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. உலகின் பல நாடுகள் வாய் மூடி மௌனிகளாகவே இதுவரை இருக்கின்றன. சிறிலங்கா உள்விவகாரத்தில் சிறிது காலம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்த இந்திய நடுவன் அரசு, பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாரிய பங்களிப்பை சிறிலங்கா அரசிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இந்தியா செல்வதும், அவர்களுக்கு இந்தியா தேவையான உபசரிப்புக்களைச் செய்வதுமாக நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்துடன், இந்திய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் இந்தியாவில் ஈழத்தமிழருக்கு எதிரான பல நாசகார காரியங்களைச் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இறுதி யுத்தத்தில் நடந்த பல சம்பவங்களுக்குச் சாட்சிகளாக இருக்கும் பல தமிழர்களை இலக்கு வைத்தே இப்போது காய் நகர்த்தல்களை இந்திய மற்றும் சிறிலங்காவின் உளவாளிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஈழத் தமிழரின் வாழ்வில் இந்தியாவிற்கு கரிசனை உண்டு என்று ஒருபுறத்தில் கூறிவிட்டு, மறுபுறத்தில் அவர்களுக்கு எதிரான பல நாசகார வேலைகளைச் சிங்கள அரசுடன் இணைந்து செய்வது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சிங்கள அரசுகள் தொடர்ந்தும் தமிழருக்கு நீதியைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதை யாவரும் அறிவர். பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் தமிழின விரோதப் போக்கை சிங்கள அரசுகளும் விட்டதாக இல்லை. தமிழரின் அரசியல் அறவழிப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் எந்தவொரு நாடும் ஆதரவளிக்கவில்லை. 1983-ஆம் ஆண்டுக்கு பின்னரான சம்பவங்கள் இந்தியாவின் கவனத்தை ஈழத் தமிழர் சார்பாக திருப்பியது. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது.
சிங்கள அரசுகள் செய்யும் ஒவ்வொரு கண்துடைப்பு நாடகங்களையும் உலக நாடுகள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்னராவது சிங்கள ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை உலகநாடுகள் அறிய வழிவகுத்துள்ளது. இதற்குப் பின்னராவது, ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை வகுத்து தமிழரின் அரசியல் கோரிக்கையை பூர்த்தி செய்து, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமா உலக நாடுகள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
இது போன்ற விடயங்களை மறைக்க தமிழர்கள் போன்று பல புல்லுருவிகளை பல தளங்களிலும் உலவவிட்டு ,தங்களின் மீதான குற்றத்தை மழுங்கடிக்கப்பார்க்கிறது சிங்கள அரசு.
தமிழா விழித்துக்கொள்.
தமிழரை ஏமாற்றும் சிறிலங்காவின் திட்டம் வெற்றியடையப் போவதில்லை -என்னும் இந்த கட்டுரையின் ஆசிரியர் அனலை நிதிஸ் ச. குமாரன்.
நன்றி -அனலை நிதிஸ் ச. குமாரன் அவர்களே.
இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய வழக்கறிஞர் சிதம்பரம் அவர்களுக்கும் நன்றி.
படங்கள் உதவி-கூகுள்,
.
.
Tweet |
|
42 கருத்துகள் :
பிற நாட்டு அரசு ஒரு நாட்டுக்கு உதவி புரிய போகிறேன் என்று கூறினால், அதன் முழு அர்த்தம் உன்னை சுரண்ட போகிறேன் என்பதே ஆகும்.. எந்த நாட்டு அரசும் பிற நாட்டு அடித்தள மக்களுக்கும் உதவி புரிய வேண்டும் என்று எண்ணுவதில்லை
வீரியமுள்ள விதை முளைக்காமல் இருக்காது இல்லையா...?
இலங்கைக்கு அதி உன்னத ஆதரவை அட்டகாசமாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது, காங்கிரஸ் தலைமை...!!!
திருடனும் அவனே; நீதிபதியும் அவனே.
நாம் இவர்களிடம் என்ன நீதி, நன்மை எதிர்பார்க்க முடியும்?
நல்ல பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
நண்பர் சூர்யா ஜீவாவின் கருத்தை வழிமொழிகிறேன்.
உலக நாடுகள் என்னதான் செய்யப்போகின்றன?
நல்ல பதிவு.. நன்றி.
சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்பார்கள்
அதுபோல எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்வார்களா???
நீதியைச் சொல்பவனே குற்றவாளி என்ற நிலை...
நல்ல அலசல் சார்! இவர்கள் எல்லாம் எங்கே சார் திருந்தப் போகிறார்கள். உலக நாடுகளை நம்பி எவ்வித பிரயோசனமும் இல்லை என்பது என் கருத்து. நமது நாடு தான் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும். நன்றி சார்!
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும், தங்களின் நண்பர்களுக்கும், மற்றும் எல்லாருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புரியாத புதிர்
நண்பரே
இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கே இந்திய அரசு உதவுவதில்லை
உதாரணதிற்கு சில
மீனவர்கள் பிரச்சினை, காவிரி,பாலார், முல்லைபெரியார் மற்றும் பல தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, என்று ஏராளம்
இந்நிலையில் ஈழ தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு காட்டிய ஈடுபாடு அனைவரும் அறிந்ததே
எல்லா இன்னல்களுக்கும் காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையே
இங்கு தமிழுக்காக தமிழனுக்காக பாடுபடும் அரசியல் கட்சி தலைவர்களை விட தங்களை முன்னுரிமைபடுத்தி செயல்படும் கட்சிகளே அதிகம்
மதிய அரசில் உள்ள எந்த அரசியல் கட்சி அமைச்சர்களும் தங்கள் சுயநல நோக்கம்தாண்டி தமிழர்களுக்காக தமிழ் நாட்டிற்காக சிந்திப்பது கிடையாது என்பது வேதனைக்குரியது
மற்றவர்கள் தமிழர்களை இழிவுபடுதுவதைவிட தமிழர்கள் தங்களுக்குள்ளே தங்கள் இன மக்களை இழிவுபடுத்தி இன்பம் காணுகின்றனர் .
இந்நிலை மாறினால்தான் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்
பிறக்கும் புத்தாண்டு இந்த செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கட்டும்
நன்றி.
ம்...எல்லாரும் சேர்ந்து சும்மா பம்மாத்துக் காட்டுகினம்.பாங்கிமூன் இவ்வளவு காலத்துக்குப் பிறகு நேற்றோ முந்தைநாளோதான் கொலைக்களம் காணொளி பார்த்தவர்.எங்கட கைகளில ஒற்றுமையும் பலமும் இருந்தால மட்டுமே.அதுக்கு திரும்பவுமொரு 30-40 வருடத் தலைமுறைகள் காத்திருக்கவேணும் இன்னொரு சூரிய வருகைக்காக !
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
சர்வதேச அரசியலின் மாயச்சூழலை புரிந்துகொள்ளமுடியாது "
ஆஜர்
The mass media in India is conspicuously and deafeningly silent on the Report that Srilankan Government has been forced to release ! So much for the freedom and integrity of the Indian mass media. This ominous silence is revealing ... Not many Thamizhs in Thamizh Nadu even know of the release of the Report leave alone is content!
What are the nations the World all over who feigned ignorance of what is happening to Thamizhs in Srilanka, looked the other way and reveled in all kinds of pretensions and mouthed that soon the government of Srilanka would "solve" the ethnic issue going to do now that the sham and hypocritical Report is out ? Nothing - absolutely nothing.
Neither the ahimsa, non-violent, Gandhian movement of Thanthai Selva for justice and human rights succeed nor Prabhakaran's Guerrilla war for freedom and liberty and self-respect . Both have been ruthlessly and mercilessly crushed and genocide conducted out-beating Hitler and Mussolini with the West and UN enjoying the spectacle ! It is time that Eezham Thamizhs stop reading Thirukkural and start studying in depth and detail Machiavelli's 'The Prince' and Kautilyar's 'Arthasahstra' !
நரிகளின் நாட்டமை வெகு நாட்களுக்கு நீடிக்காது
அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும்
அருமையான பதிவு
மிக்க நன்றி
உலக நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்று உலக நாடுகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன..ஆமாம் உலக நாடுகள் எவை?
முடிவுதான் என்னவென்று பார்ப்போம்.
அனலை நிதிஸ் ச. குமாரன் அவர்களின் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி..
உலக நாடுகளின் கவனம் என்று கூறவே நா கூசுகின்றது ..
இத்தனை வருடங்களாய் வேடிக்கை பார்க்கும் ஏகாதி பத்திய நாடுகளை
வல்லரசு என்று கூறுவதை விட வல்லூறுகள் என்று கூற தான் மனம் வருகின்றது ,,,
கட்டுரை அனுப்பிய நண்பருக்கும் , பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள் சார்
அனலை நிதிஸ் ச. குமாரன் அவர்களின்
இக்கட்டுரையை தங்களுக்கு அனுப்பிய வழக்கறிஞர் சிதம்பரம் அவர்களுக்கும் அதனை எமக்கு அறியத்தந்தமைக்கும் நன்றி நண்பரே .
கண் துடைப்பு நாடகங்களை உலகம் உணர்ந்து கொள்ளும் என்றே நம்புகிறேன்.முக்கியமான பதிவு,நன்றி
Antha ' Pullurigalai' kalai edukka vendum.
Arumai. I have received a lot of informations. Nanri.
TM 14.
எந்த நாடும் ஒன்றும் செய்ய முடியாது! - இந்தியாவைத் தவிர!
இன்றைய இந்திய மைய ஆட்சியாளர் மாறும் வரை பொறுத்திருக்க வேண்டியதே!
இந்தியர்களைத் தலைமையாகக் கொண்ட மாற்று ஆட்சி அமையும்போது நாமெல்லாரும் ஒன்று கூடி முறையிட்டு உரிமைகளை சிறிது சிறிதாக மீட்டெடுப்போம்! இதுவே நிதர்சனம்!
பகிர்வுக்கு நன்றி. படிப்பினைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவு தொடங்கும் போதே ஓரளவு மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை செய்தன. அதில் சர்வதேச நெறிமுறைகளோ அல்லது பொறிமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று. சிலர் அரச சேவைகளில் இருந்து சிங்கள அரசுக்கு ஆதரவான விடயங்களில் தங்கள் பதவிகளை துஷ்பிரயோகம் செய்தவர்கள்.
பிறகு, விசாரணை மேற்கொள்ளப்பட்ட விதங்கள், சாட்சிகள் நடத்தப்பட்ட விதங்கள், பயமுறுத்தல்கள், சாட்சிகளை கலைத்தமை என்று ஏகப்பட்ட குழறுபடிகள்.
அறிக்கை, பற்றி என்றால் அது போர் நிறுத்த காலத்துக்குப் பின்னான பிரச்சனைகளிலிருந்து பேசத்தொடங்குகிறது. ஆண்டாண்டு கால உரிமைப்பிரச்சனைகள் குறித்து பேசப்படவே இல்லை. இது பயங்கரவாதத்தை அழித்த போர் என்பதே அறிக்கையின் தொனி கூட.
இலங்கை என்ன செய்தாலும் இந்தியா காப்பாற்றும் என்கிற துணிச்சல் இருக்கு சிங்கள பெளத்த ஆட்சியாளர்களுக்கு.
கருத்து சொல்ல இதில் எனக்கு அறிவு பத்தாது பாஸ்... அவ்வவ்
ரதி அக்காவின் கருத்து குட்
உலக நாடுகள் எதாவது செய்தாலே தமிழனுக்கு விடிவு ,பார்ப்போம்
தமிழா விழித்துக்கொள்.
அருமை முடிவை எதிர்நோக்கி ....
பகிர்வுக்கு நன்றி தோழர்..
ஈழத் தமிழர்களுக்கு விடியல்கள் என்று???
அருமையான பகிர்வு!
நன்றி!
ஈழத் தமிழர்களுக்கு விடியல் என்று???
அருமையான பகிர்வு!
நன்றி!
ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பெரும்பான்மை சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். //
அண்ணே, இவ் இடத்தில் ஓர் வரலாற்றுத் திருத்தம் வேண்டும்.
இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், தமிழ் அறிஞர்களின் பூரண சம்மதத்தோடு தான் முழு இலங்கையும் சிங்களவர்களின் கையில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது.
கட்டுரைப் பகிர்விற்கு நன்றி
இக்கட்டுரை பிரச்சனையை ஒரு முக்கியமான கோணத்தில் இருந்து அலசுகிறது.. விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது..
கட்டுரையை இனம் கண்டு பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்...
தமிழர்கள் எங்களுக்குப் பிறக்கிற 2012 ஆவது அமைதியாக சந்தோஷமாகப் பிறக்க வேண்டிக்கொண்டு உங்களுக்கும் என் அன்பைச் சொல்லிக்கொள்கிறேன் !
உண்மையில் மிக சிறந்த ஆக்கத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள் தமிழரை ஏமாற்றும் சிங்களனுக்கு சரியான புரிதலை உண்டாக்க வேண்டிய பொறுப்பு நமக்கும் உள்ளதல்லவா
நன்றி நொரண்டு அவர்களே..
சில சமயங்களில் புல்லுரிவிகள் வேலைகளை எல்லாத் தளங்களிலும் எல்லா அரசுகளும் செய்கின்றன.
இந்தியாவிலும் இனத்தை தங்கள் நோக்கத்திற்காக இந்தியாவை ஒன்றாக்கி - இங்கேயும் குழப்பம் விளைவித்த பிரித்தானியர்களை நாம் நினைவுக்கு கொண்டு வருவதும் நல்லதே.
பகிர்வுக்கு நன்றி. நல்ல கட்டுரை. சிங்களனின் ஏமாற்று வேலை நெடுநாள் தாங்காது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே
இந்த பதிவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வது மனசுக்கு கஷ்டமதான் இருக்கு சகோதரரே. இந்த புத்தாண்டில் நாம் அவர்களுக்காக வேண்டிகொள்வோம் சகோ
புலம்புவதால் யாதொரு பயனும் இல்லை
நடந்தது நடந்ததுதான்
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கூட்டம் அங்கு வாழும் மற்ற்றொரு கூட்டத்தை அழித்து ஒழிக்கிறது,
இல்லையேல் அடிமைபடுத்தி சுரண்டுகிறது
இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அயோக்கியர்களுக்கு சோரம் போகும் ஒரு சில சுயநல பிசாசுகள்தான்.மற்றும் பெரும்பாலான மக்களிடையே ஒற்றுமைஇன்மை மற்றும் பிரச்சினைகளை உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அணுகுவது போன்ற காரணங்களே
அவர்களை இனம் கண்டுகொள்ளும் அறிவு பாமர மக்களுக்கும் இல்லை
மெத்த படித்தவனுக்கும் இல்லை என்பதுதான்
சென்றதினி மீளாது மூடரே நீவிர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய் பிறந்தோம் என்ற எண்ணமதை ......தீமைகள் ஒழிந்து போம் திரும்பி வாரா
என்ற பாரதியின் வரிகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை தெளிவான சிந்தனையுடனும் நம்பிக்கையுடனும் அணுகுவதே நல்ல பயன் தரும்.
சிங்கள தீவிரவாதிகளுக்கும், அதற்க்கு துணைபோன இந்திய பேரினவாத குள்ள நரிக்கும் விரைவில் தமிழர்கள் சிறந்த பாடம் புகட்டுவார்கள்
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "