'ஆரியர் - திராவிடர் யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது!’ என்ற
கருணாநிதியின் போர்ப் பிரகடனத்தைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது! ''நான் பாப்பாத்தி'' என்றும், ''ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?'' என்றும் கேட்ட ஜெயலலிதா.... ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை!
''பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். கட்சி நடத்தினார். நாங்களோ பகுத்தறிவாளர்கள்!'' என்கிறார் கருணாநிதி. எம்.ஜி.ஆர். மைசூர் தாய் மூகாம்பிகையை வணங்கியது வெளிப்படையான செய்தி. ஆனால், 'மறைமுகமான பக்தி நடவடிக்கைகள் கருணாநிதியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ, மூத்த நிர்வாகிகளிடமோ இல்லை!’ என்று அவரால் சொல்ல முடியுமா?
கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது. பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். 'உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ''அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!'' என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. 'பரம்பரையோ பஞ்சத்துக்கோ பொட்டும் விபூதியும் வைப்பது தவறு’ என்று எத்தனை தி.மு.க-காரர்கள் இன்று நினைக்கிறார்கள்?
''பெரிய கருப்பனை ஏன் அறநிலையத் துறைக்கு அமைச்சர் ஆக்கினேன் தெரியுமா? அவர் கோயிலில் விழுந்து விழுந்து வணங்குவதைப் பார்த்துத்தான்!'' என்று கருணாநிதியே கம்பீரமாகக் காரணம் சொன்ன பிறகு... அடுத்த முறையும், 'அந்தத் துறையே தனக்குக் கிடைக்க வேண்டும்’ என்று பெரிய கருப்பன் இன்னும் பெரிய கும்பிடு போட மாட்டாரா என்ன?
இன்று வரைக்கும் கருணாநிதியின் மஞ்சள் சால்வைக்கும், சிவப்புக் கல் பவழ மோதிரத்துக்கும் சரியான விளக்கம் இல்லை. தேர்தலுக்கு முன்பும், வெற்றிக்குப் பின்பும் குல தெய்வம் கோயிலுக்குப் போகாமல் கருணாநிதி குடும்பம் இருந்தது உண்டா?
இந்த முறை தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அவரது வாகனத்தின் முன்பு தேங்காய் உடைத்துக் கிளப்பியதன் மர்மம் என்ன?
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்கு விஜயம் செய்யும் மாஜி நடிகை ஒருவர், யார் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வருகிறார் என்பதையாவது கருணாநிதியை ஆதரிக்கும் பகுத்தறிவாளர்களுக்கு 'ஈரோட்டுக் கண்ணாடி’ காட்டிக் கொடுத்ததா? ராஜாத்தி அம்மாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக 77 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்த திருவேற்காடு
கருமாரியம்மன் கோயிலுக்குள் கருணாநிதி சென்றதில் இருந்து ஆரம்பிக்கிறது இறங்குமுகம். அது ராகு காலம், எமகண்டம் பார்த்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதில் போய் முடிந்திருக்கிறது.
எவ்வளவு நிறைந்த நாளில் தாக்கல் செய்தாலும், தமிழ்நாட்டின் நிதிநிலையில் துண்டு விழாமல் தடுக்க முடியுமா என்ன?
இதற்குப் பிறகும், தேர்தல் பொதுக்கூட்டங்களில் கருணாநிதி தனது பகுத்தறிவு, திராவிடர் இயக்கம், பெரியார் என்ற வார்த்தைகளை உச்சரிப்பதுதான் ஆச்சர்யமானது!
ஈரோடு கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ''இது நான் வளர்ந்த குருகுலம்!'' என்கிறார். சேலத்திலோ, ''எங்களுடைய கொள்கையிலே, எங்களுடைய லட்சியங்களிலே... ஒரு சிறு மாசும் ஏற்படுவதற்கு, எங்கள் உயிர் இருக்கிற வரையிலே விட மாட்டோம்... விட மாட்டோம்... விட மாட்டோம்!'' என்று சூளுரை மேற்கொண்டார் கருணாநிதி.
புட்டபர்த்தி சாய்பாபா, கோபாலபுரம் வீட்டில் எழுந்தருளி மோதிரம் வரவழைத்துக் கொடுத்தபோதும், வீட்டு வாசலில் ஜக்கி வாசுதேவ் வைத்த மரத்துக்குத் தண்ணீர் ஊற்றியபோதும், மாதா அமிர்தானந்தமயி உடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டபோதும், வேலூருக்கே சென்று தங்கக் கோயில் நாராயணீ அம்மாவை சந்தித்தபோதும், குருகுல வாசம் மறந்துபோனதா?
ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, ஆறாவது முறையும் அந்தப் பதவியை அடைவதற்காகச் சொல்லும் காரணம், திராவிடக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காகவாம். ''இந்த கருணாநிதி வந்தால், திராவிடக் கொள்கைகளையே நிறைவேற்றுவான். அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும்!'' என்று அதற்கு விளக்கமும் சொல்கிறார். இந்த ஐந்து முறையும் திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களுக்காக அவர் செய்தது என்ன என்பதுதான் இன்றைய கேள்வி!
'கோயிலில் சாதி நீக்கம் வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் வலியுறுத்திய முழு முதல் கொள்கை. 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை முதல் தடவை முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி கொண்டுவந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பிறகுதான், பெரியார் மறைவு சம்பவம் நடந்தது. ''அய்யாவின் நெஞ்சில் முள்ளாக இருந்த இந்தக் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. முள்ளோடு புதைக்கிறோம்!'' என்று கருணாநிதி சொன்னார். 37 ஆண்டுகளாக அந்த முள், பெரும் முள் புதராக மாறிப்போனதுதான் மிச்சம். இந்தத் தடவையும் அதே சட்டத்தைக் கொண்டுவந்து... உச்ச நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை உடைக்க தி.மு.க. அரசு செய்த முயற்சிகள் என்ன? அந்தக் கொள்கையை நிறைவேற்ற செய்த பிரசாரம் என்ன? கணக்குக் காட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதும், தடை விதிக்கப்பட்டால், அதைக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும்தானே நடக்கிறது. அர்ச்சகர் ஆகும் ஆர்வத்தில் படித்த மாணவர்கள் 200 பேர் இன்று தெருவில் திரிகிறார்கள். ஆனால், அதற்கான பாராட்டு விழாக்களும், வீரமணி வைத்த கல்வெட்டும் மினுமினுக்கிறது. இதற்குத்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி வேண்டும். ஆனால், 'திருவண்ணாமலை திருக்கோயிலில் 10 வகையான பணிகளைச் செய்வதற்கும், குறிப்பிட்ட சாதியினர்தான் இடம்பெற வேண்டும்’ என்று உத்தரவு போட்டதும் தி.மு.க. அரசுதான். இதற்கு யார் உச்ச நீதிமன்றம் போனார்கள்? முள்ளை எடுக்க யார் தடுத்தார்கள்?
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை உயர்த்திவிட முடியும் என்ற நோக்கத்துக்காகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திராவிட இயக்கமும், அதற்கு முந்தைய தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் முன்மொழிந்தது. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக மட்டுமே,
சாதி ஓர் அளவுகோலாக அமையலாமே தவிர, சாதிப் பெருமைகள் பேசுதல் கூடாது என்பதற்காகவே சாதிப் பட்டங்களை நீக்க பெரியார் உத்தரவிட்டார். ஆனால், செங்கல்பட்டு சுய மரியாதை இயக்க மாநாட்டின் 80-வது ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி தனது சாதியைச் சொல்லிக்கொள்வதும், அவரது கலை மற்றும் எழுத்துலக வாரிசான அவர் மகள் சுய சாதி மாநாட்டில் கலந்துகொள்வதும், மற்ற மந்திரிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்று சொல்லப்படுவது திராவிட இயக்கத்துக்கு அழகா?
ஐந்து முறை முதல்வராக இருந்தபோதும், இதே தமிழகத்தின் கோயில்களில், தெருக்களில், தேநீர் விடுதிகளில், சுடுகாடுகளில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. ஓடிக்கொண்ட தேரின் வடத்தை பக்தி மிகுதியால் தலித் பெண் ஒருவர் தொட்டார் என்பதற்காகக் கொல்லப்பட்ட சம்பவம் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?
40 ஆயிரம் கிராமங்களில், 90 சதவிகிதக் கிராமங்களில் நாளுக்கு நாள் சாதிய வன்மமும், சாதித் தீண்டாமையும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தலித் ஒருவரை வலது பக்கமும், வன்னியர் ஒருவரை இடது பக்கமும் நிற்கவைத்து போலீஸ்காரர் ஒருவர் டீ குடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் தீண்டாமை மறைந்துவிடுமா?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எப்படி அமல்படுத்துகிறீர்கள், அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்து வருகிறதா என்பதைக் கண்காணிக்க, 'முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று சட்டத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை, அதுவும் மூன்று மாதங்களுக்கு முன் கூடியது. ''பள்ளர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது!'' என்றார் பெரியார். திராவிடர் யுத்தத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய கருணாநிதி இதை நீக்க ஐந்து ஆண்டுகள் என்ன செய்தார்?
இட ஒதுக்கீடு என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அடுத்த கட்டத்தைத் தாண்டிவிட்டன. கல்வி, வேலைவாய்ப்பு என்பதில் இருந்து அதிகாரம் மற்றும் வளத்தில் இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டன. கறுப்பின மக்கள், பழங்குடியினருக்கு பல்வேறு உரிமைகள் தரப்படுகின்றன. கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தருவதை ஓர் அரசாங்கம் சலுகையாகச் சொல்ல முடியாது. கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. வேலைவாய்ப்பைத் தருவது என்றால், ஒருவனிடம் வேலை வாங்கிவிட்டுக் கூலி தருவது என்றுதான் பொருள். ஆனால், அந்த இட ஒதுக்கீட்டைக்கூட முழுமையாகத் தராமல், தனியார் துறைகளில் அந்தச் சலுகைகளை வழங்கும் முயற்சிகளையும் எடுக்காமல், அடுத்த கட்டத்துக்கு அதைக் கொண்டுசெல்லும் அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் திராவிட இயக்க ஆட்சிக்கு அழகா?
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தை...’ என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தார் கருணாநிதி. 'ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்ற சுந்தரம் பிள்ளையின் வார்த்தையை சூத்திர ஆட்சி ஏன் நீக்க வேண்டும்? அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு கொண்டாடப்பட்டது. இதைப் பார்த்ததும் பெரியார் ஓர் அறிக்கையை வெளியிட்டார். ''தமிழுக்கு ஒரு மாநாடாம்! வெங்காய மாநாடு! கும்பகோணத்தில் மகாமகம் நடத்துவதைப்போல இந்த மாதிரி தமிழ் மாநாடு நடத்துவதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்டவர் பெரியார். ராஜராஜ சோழனின் 1000-ஆவது ஆண்டு விழாவை பட்டுச் சட்டை, பட்டு வேட்டி, பட்டுத் துண்டு அணிந்து கொண்டாடினார் கருணாநிதி. ''இந்த சேரன், சோழன், பாண்டியன் எல்லோருமே தாங்கள் மன்னராக இருக்க, ஆரியரின் அடி வருடித் தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டவர்கள்!'' என்று கிண்டல் அடித்தவர் பெரியார். ஆனால், தன்னுடைய ஆட்சியின் சாதனையாக, கோவை செம்மொழி மாநாட்டையும், தஞ்சை விழாவையும் கருணாநிதி காட்டி வருகிறார். கோவை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்துகொண்டதையும் 'இரண்டாவது ராஜராஜ சோழன்’ என்று கருணாநிதியை அவரே பாராட்டியதையும் கொள்கைச் சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. இதை ஏற்றுக்கொண்டால், 'சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று ஜெயலலிதாவைப் பாராட்டியதையும், 'திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி’யாகக் கண்டுபிடித்துச் சொன்னதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!
பெரியாருக்கு சாதி ஒழிப்பு எப்படி அடிப்படைக் கொள்கையாக அமைந்து இருந்ததோ, அதேபோல அண்ணா தனது மரண சாசனமாகச் சொன்னது மாநில சுயாட்சியை!
புற்றுநோய் தன்னைக் கொன்று வந்த நிலையிலும், 'மாநில சுயாட்சியை முறைப்படி வழங்காவிட்டால், இந்திய இறையாண்மையை அதிகாரக் குவிப்பு கேன்சராகக் கொன்றுவிடும்’ என்று சொன்னார். அண்ணா கடற்கரையில் காற்று வாங்கப் போய் அரை நூற்றாண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும்போதும், மாநில சுயாட்சியை அடைய வேண்டிய லட்சியமாகத்தான் கருணாநிதி சொல்லி வருகிறார். 96-ம் ஆண்டில் இருந்து (இடையில் 18 மாதங்கள் தவிர!) மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்தது தி.மு.க. மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து மற்ற மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதை நிறைவேற்றவில்லை.
ஆனால் சோனியா சிரிக்கவில்லை, மன்மோகன்சிங் சந்திக்கவில்லை என்றால் மட்டும், மறுநாள் காலையில் 'மாநில சுயாட்சியை அடைந்தே தீருவோம்’ என்று குரல் கொடுப்பது கருணாநிதியின் வாடிக்கை ஆகிவிட்டது. அதாவது, தன்னுடைய சுயதேவைகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதிக்குமானால், பூச்சாண்டி காட்டுவதற்கு அறிவாலயத்தில் அலமாரியில் இருந்த அண்ணாவின் சுலோகம் தூசி தட்டி எடுக்கப்படும்.
''இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசாங்கத்தின் கொள்கைதான் என்னுடைய கொள்கை!'' என்று அறிவித்ததை அண்ணாவின் தத்துவத்துக்கு எழுதப்பட்ட மரண சாசனமாகச் சொல்லலாமா? '63 இடங்களை எப்படித் தர முடியும்?’ என்று கேள்விகள் கேட்பதும், அந்தக் கோபம் சி.பி.ஐ-யை நினைத்து மூன்று நாட்களுக்குள் அடங்கிவிடுவதும் 63 இடங்களை தூக்கிக் கொடுத்துவிட்டு, 'சுமுக உடன்பாடு ஏற்பட்டது’ என்று ஆர்ப்பரிப்பதும் கருணாநிதியின் திராவிடத் தைரியத்துக்கு சமீபத்திய சான்று என்றும் சொல்லலாமா?
''பார்ப்பானும் இல்லை, பறையனும் இல்லை என்ற நிலையை உண்டாக்கக்கூடிய வசதியும், வாய்ப்பும் கிடைக்கக்கூடிய தறுவாயில்தான் நாம் பதவி குறித்துக் கவலைப்படுவோம். அதுவரை பதவிகளைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டோம். அவை எல்லாம் நாம் துப்பிய தாம்பூலங்கள்தாம்...'' என்றார் பெரியார். அவரது பெயரை கருணாநிதி பேசுதல் பாவம் அல்லவா!
- ப.திருமாவேலன், படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
( எனக்கு மெயிலில் இதனை அனுப்பிய வழக்கறிஞர் கி.சிதம்பரன் அவர்களுக்கும்,கட்டுரையாளருக்கும் எனது நன்றிகள் )