காந்தி என்ன செய்து கிழிச்சார் , அவரால நாட்டுக்கு என்ன லாபம்.அவர் வெள்ளக்காரங்ககிட்டயிருந்து பிரிச்சு கொள்ளக்காரர்கிட்ட நாட்ட கோடுத்துட்டார்.அதனால தான சுதந்திரமே வேணாமுனு நாங்க சொன்னோம்.காந்திக்கு சப்போட்டா பேசரவங்க முதலில வரலாறு தெரிஞ்சுக்கனும் என பேசும் கண்மணிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ...
...............
அடிமைப்பட்ட பல நாடுகளிலே 'சுதந்திரம் வேண்டும்' என்பது மட்டுமே பிரச்னை - இங்கோ, சுதந்திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்கவேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கிய போது, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும், என்பது மட்டும், முழக்கமாக இல்லை - அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகச் தெரியவி்ல்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை - ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும என்ற ஒரே ஒரு முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாது,
அன்னிய ஆட்சி ஒழியவேண்டும்.
மக்களாட்சி மலர வேண்டும்.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்.
தொழில்கள் பெருக வேண்டும்.
கல்வி பரவ வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
தீண்டாமை போக வேண்டும்.
கிராமம் சீர்படவேண்டும்.
வறுமை போக வேண்டும்.
சுரண்டல் முறை ஒழிய வேண்டும்.
என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப்போர் சூழ்நிலைக்கும், நமது நாட்டிலே விடுதலைப் போர் நடந்த போதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் - இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமம் இருக்கிறது. ...
ஏழை ஈடேற வேண்டும்.
ஏழை உரிமை பெறவேண்டும்.
ஜாதிபேதம் ஒழியவேண்டும்.
ஒற்றுமை மலரவேண்டும்.
என்று கூறினதுடன், 'இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்' என்றும் கூறினார்....
- அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையிலிருந்து
...............
உலக உத்தமர், மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது, இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் . எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டுவரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளிபரவுகிறது. அதை எண்ணுவோம்; ஆறுதல் பெற முயற்சிப்போம்.
நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார்; அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.
அவர் பிறந்தபோது நமது நாடு, உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடுவதற்கு முன்னும் மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும் நமது விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும், பிரதிநிதிகளும் வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது.
அவர் பிறந்தபோது, உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால் உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அவர் பிறந்தபோது, இங்கு தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்குத் தமது ராஜதந்திரத்தை உபபோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.
அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்ற தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிடப்பட்டன.
குடித்துக் கிடப்பது மிகச் சாதாரணம், சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள், அவர் பிறந்த காலம் மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே, அவர் மறைந்தார்.
அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும்படியான அளவுள்ளதாக இருந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப் போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே, அவர் கண்களை மூடினார்.
அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும் மற்ற அதிகாரிகளும் இங்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆள்வதற்கு அடிமை இந்தியாவை விட்டு வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.
இவ்வளவையும், அவர், மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை மக்களிடையே வாழ்ந்து மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.
இவ்வளவு தந்தவருக்கு அந்தத் துரோகி தந்தது, மூன்று குண்டுகள், சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.
அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.
நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள் ஜாதிச் சனியன், வறுமை, அறியாமை ஆகியவற்றை அடியோடு களைந்தெரிந்துவிட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்திலே ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால், அவர் கொலை செய்யப்பட்டார்.
உலகப் பெரியார் காந்தி - அறிஞர் அண்ணாவின் வானொலிப் பேச்சு .
Tweet |
|
8 கருத்துகள் :
அறியாத பல தகவல் களஞ்சியம் அறிந்தேன் தோழரே நன்றி
த.ம.2
அப்படியா....?
நல்ல கட்டுரை.
மகாத்மா போற்றுவோம்
ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. எதிர்மறைத் தலைப்பிட்டு, அருமையான செய்திகளை நேர்மறையாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.
நல்ல கட்டுரை.
காந்தி கிழிச்சதை தெரிந்து கொண்டேன்..
நல்ல கட்டுரை
நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "