"நல்லநேரம், இராகுகாலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே " இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொழுத்த இராகுகாலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் இராமசாமி! இராமசாமி! என்று கூப்பிட்டால், இவன் இப்போது இராகுகாலம் நான் வரமாட்டேன் என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு குடுகுடு என்று ஓடிப்போய் வந்தேன் என்று தானே கூறுவான்? அப்பொழுது எங்கே போயிற்று இராகுகாலம்?"
--தந்தை பெரியார்.
நான் தினசரி பேருந்தில் பயணம் செய்யும் விதமான பணியில் இருப்பதால் ஓர் ஆண்டின் 365 நாட்களும் பல்வேறு விதமான சூழலில் பயணம் செய்திருக்கிறேன் . மிகவும் நெருக்கியடித்துக் கொண்டு ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்துக் கொண்டு நிற்பதற்குக்கூட இடமில்லாதவாறும். அதே பேருந்து வழித்தடத்தில் ஓட்டுநர் நடத்துநர் மற்றும் நான் என மூவர் மட்டுமேயும் அமர்ந்து பேருந்து காத்தாடவும் பயணம் செய்திருக்கிறேன்.
ஏன் இந்தத் தலைகீழான நிலை? ஒரு நாள் மிகமோசமான இடநெருக்கடி; மற்றொரு நாள் ஆளேயில்லாத வீண் பயணம். பொதுவாக நகர்ப்புறங்களில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என காலை 8 மணியிலிருந்து 10 மணிவரையும், அதேபோல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பும் 5மணியிலிருந்து 7மணி வரையும் பேருந்தில் நெரிசல் மிகுந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதே போல கிராமப்புற வழித்தடத்தில் விவசாயக் காலத்தில் களைஎடுக்க, அறுப்புக்கு என்று உழைக்கும் பெண்கள், கூட்டம் கூட்டமாக ஏறும் போது பேருந்தில் நெரிசல் மிகுவதையும் நாம்புரிந்து கொள்ள முடியும்.ஆனால் ஓர் ஆண்டின் குறிப்பிட்ட சில நாட்களான, தை, மாசி, பங்குனி, ஆனி, ஆவணி போன்ற மாதங்களின் முகூர்த்த நாட்களில் மட்டும் நாம் மேலே கூறிய‡ நிற்பதற்கு இடமில்லாத நெரிசலும் பிற நாட்களில் அதுவும் ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் முற்றிலும் கூட்டமில்லாத வெறிச்சோடிய நிலையையும் பேருந்தில் நாம் காணும்போது நமது தமிழ் மக்களிடம் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை நம் நாட்டின் ஓரு துறை (போக்குவரத்துத்துறை) யையே எவ்வாறு பாதிக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
அடுத்து பேருந்துப்பயணம் செய்பவர் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகவே பயணம் செய்வது புலனாகும். தென்மாவட்டங்களில் சராசரியாக ஒரு பேருந்தில் 50 ஆண்களுக்கு 10 பெண்கள் என்ற விகிதத்திலேயே பயணம் செய்கின்றனர். அதுவும் பெண்களின் பேருந்துப் பயணம் பெரும்பாலும் பகல் பொழுதுகளிலேயே நிகழ்கிறது. மாலை 6 மணிக்குமேல் பயணம் செய்வது மிகக்குறைவு. இரவு 9மணிக்கு மேல் முற்றிலும் இல்லை என்றே கூறலாம்.
இதற்குமாறாக ஆண்களைவிடப் பெண்கள் அல்லது ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பயணம் செய்யும் நாட்கள் இந்த முகூர்த்த நாட்களேயாகும். அதுவும் நிறைய நகைகளையும், பட்டுப்புடவையையும் அணிந்து கொண்டு பங்குனி, சித்திரை மாத வெயிலில் பெண்கள் பேருந்தில்படும் தொல்லை மிக அருவருப்பானதாகும்.
இவ்வாறான நேரத்திலேயே திருடு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சேட்டைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் முகூர்த்த நாட்கள், திருவிழாக்காலம் போன்ற இந்துமதம் சார்ந்த நாட்களில்தான் பெண்கள் அதிகமாகப் பயணம் செய்கின்றனர். ஆனால் பணி, உழைப்பு, பொருளீட்டல் போன்ற காரணங்களுக்காக ஆண்களைப்போல் வீட்டைவிட்டு வெளியேவந்து பயணம் செய்வது மிகக்குறைவாகவே உள்ளது.
இன்றும் பெண்கள் திருமணம், திருவிழா, கோவில், குளம் என இந்துமதப்பண்பாடு சார்ந்து மட்டுமே வீட்டை விட்டு வெளிவருவதும் பயணம் செய்வதும் அதிகமாக இருக்கிறது என்ற நிலை. தமிழர் வாழ்வுமுறை காலத்தால் எந்த அளவு மாற்றம் அடைந்துள்ளது என்பது சிந்திக்கத்தக்கது.
பயணம் என்பதும் ஒருவகை நுகர்வுதான்; எனவே மற்ற எல்லாவித நுகர்வுகளிலும் பெண்கள் தமக்குரிய பங்கை, சரிபாதியை ( 50 % ) நுகரமுடியாமல் இருப்பதைப்போலவே பயணத்திலும் மிகக்குறைவாகவே ‡ அதுவும் மதம்சார்ந்தும், ஆண்சார்ந்தும், கேளிக்கை சார்ந்தும் பயணிக்கிறார்களேயன்றி தன்மதிப்புசார்ந்த பயணம் மிகக்குறைவே. இதில் கிராமம், நகரம், மாநகரம் என்ற வெளிக்கேற்ற மாறுபாடுகள் உண்டு.
இக்கட்டுரை இத்தகைய ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பற்றியதல்ல. மாறாக கால , நேரம் ( நல்ல நேரம்‡ கெட்ட நேரம்) தமிழர் வாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் புரியும் வினை பற்றியதாகும். ஆம் இந்துக்கள் என்போரின் ஒவ்வொரு செயலுமே காலம், நேரம், நாள், நட்சத்திரம் பார்த்தே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பார்ப்பனியம்/ இந்துமதம் வரையறுத்துத்தந்த காலவெளிகளிலேயே இந்துக்கள் வாழ்வு இயங்குகிறது எனலாம். அதன் ஒரு உதாரணம்தான் நான் மேலேகூறிய பேருந்துப்பயணம்.
பேருந்துப்பயணம் மட்டுமல்ல, இந்துக்கள் தங்கள் மயிரைச் சிரைத்துக் கொள்வதைக்கூட கிழமை பார்த்தே மேற்கொள்கின்றனர். வெள்ளியும் செவ்வாயும் முடிவெட்டிக் கொள்வதில்லை. அதே போல் இந்துக்கள் வெள்ளியும் செவ்வாயும் அசைவம் உண்பதில்லை. நம்மைப் ¼ ப V ன் ற வ ர்க ள் முடிவெட்டிக் கொள்ளவும்,இறைச்சி வாங்கவும் இந்த வெள்ளி செவ்வாயைப் பயன்படுத்தினால் சிரமம் இருக்காது. இன்று இந்துக்கள் விரதம் இருக்கும் நாட்கள் புதிதுபுதிதாக முளைத்து வருகிறது. சிலர் சனிக்கிழமையைத் தேர்வுசெய்து அன்று விரதம் என்கிறார்கள், சிலர் திங்கள் கிழமையை விரதநாளாக முடிவு செய்து அன்று ஒருநாள் அசைவம் உண்பதில்லை எனக் கராறாக மறுத்து விடுகின்றனர்.
இந்த முடிவுகளுக்குப் பின்னே யாரோ ஒரு சோதிடரின் கூற்றும், அசைவம் என்பது தீட்டு; சைவம் என்பது உயர்வு என்ற கருத்தும் மறைந்திருக்கிறது. இவ்வாறான நாள் கிழமை , நல்ல நேரம் ‡ கெட்ட நேரம் என்ற மனநோய் முற்றி சிலர் தங்கள் வீட்டுப் பெண்களின் குழந்தைப் பிறப்பை நல்லநேரத்தில் அமைய வேண்டும் என்பதற்காகக் குறித்த நேரத்தில் அறுவை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்படி செய்யும் அளவிற்குத் தீவிரமாகியுள்ளது.
இந்துக்கள் பிறப்பிற்கு நேரம் பார்ப்பதைப் போலவே இறப்பிற்கும் நேரம் பார்ப்பதும், பிணத்தையும் நேரம் பார்த்து எடுப்பதும் வழக்கமாகும். மேலும் ஒரு இந்து வெள்ளிக்கிழமை இறந்து அடக்கம் செய்யப்படுவாரேயானால் அவருக்காக இவர்கள் மேற்கொள்ளும் இரண்டாம்நாள் காரியத்தை (பால் ஊற்றுவது) சனிக்கிழமை செய்வதில்லை; ஒரு நாள் விட்டு ஞாயிற்றுக்கிழமையே செய்வர். அதேபோல் ஒரு இந்துவை சனிக்கிழமை அடக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் சனிப்பிணம் தனிப்போகாது என்ற அச்சத்தின் காரணமாக ஒரு கோழிக்குஞ்சை பிணத்தின் கால்ப்பகுதியில் கட்டி மயாணத்திற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது.
இன்னும் ஒரு நகைப்பிற்குரிய நம்பிக்கையும் இந்துக்கள் மத்தியில் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ( குளிகை ) இறந்துவிடும் இந்துவின் சடலத்தை வீட்டுக்கு வெளியே எடுத்துச்செல்ல வீட்டு வாயிலைப்பயன்படுத்தக்கூடாது என்பதும் வீட்டுச்சுவரை உடைத்து புதிய வழியை உருவாக்கி, அதன் வழியே பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.
சாதாரண மனிதர்களின் நிலை இது என்றால் நாட்டின் உயர்கல்வி கற்ற அறிஞர்கள் , விஞ்ஞானிகளின் நிலையோ இதைவிடக் கேவலமாக இருக்கிறது. இவர்கள் புதிதாக வடிவமைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை நேரம் (இராகுகாலம், எமகண்டம்) பார்த்து ஏவுவது என்பது, ஒரு இந்து எவ்வளவுதான் உயர்ந்த கல்விகற்று இருந்தாலும்கூட அவனால் இந்து மதப்பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் மீற இயலாது என்பதையே காட்டுகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, அதிகார வர்க்கம் முழுதுமே இவ்வாறுதான் இருக்கிறது. ஒரு மதச்சார்பற்ற அரசின் திட்டங்கள் துவக்க விழாக்கள், அடிக்கல் நாட்டல்கள் என அனைத்துமே இந்துப்பார்ப்பனிய வழிகாட்டலின்படி இங்கு நேரங்காலம் பார்த்தே மேற்கொள்ளப்படுவது மதச்சார்பின்மை என்பதைக் கேலிக்குரிய ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழர் வாழ்வு விவசாய உற்பத்தியை முழுமையாகச் சார்ந்து இயங்கிய காலத்தில் ஆடிவிதைப்பு துவங்கி தைஅறுவடை முடியும்வரை வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அதாவது கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தைக்குப்பிறகே அதாவது விவசாயப்பணிகள் முடிந்து நெல் வீடுவந்து சேர்ந்த பிறகே தம்வாழ்வின் பிறதேவைகளை‡மறு உற்பத்தி , பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய முயல்வர். இதில் நியாயமும் உண்டு.
ஆனால் இயற்கைச் சூழல் முற்றிலும் குழம்பிப் போய்விட்ட இன்றைய நிலையில் அதைச்சார்ந்து விவசாய உற்பத்தியும் மாறியுள்ள நிலையில் மேலும் குறுகிய காலப்பயிர் போன்றவைகள் நடப்பிற்கு வந்துவிட்ட நிலையிலும் ‡ மேலும் நகர்ப்புறத்தில் விவசாய உற்பத்தியைச் சாராத நிலையில் வாழும் மக்களும் கடந்த காலத்தைப் போலவே ஆடி, மார்கழி , புரட்டாசி போன்ற மாதங்களைப் பீடைமாதம் என்று புறந்தள்ளுவதும் வைகாசி, ஆனி, ஆவணி, போன்ற மாதங்களின் குறிப்பிட்ட ஒரு சில நாள்களை மட்டுமே அதாவது 365 நாள்களில் வெறும் 50 நாள்களை மட்டுமே நல்ல நாள்களாகக் கருதி அந்நாட்களில் அடித்துப் பிடித்து தம் இல்ல விழாக்களை நடத்துவதும் அறிவுக்கு ஒவ்வாத நடைமுறையாக இருக்கிறது என்பதோடு பல்வேறு நெருக்கடிகளையும் கொண்டு வருகிறது.
குறிப்பாக அய்ப்பசி, கார்த்திகை போன்ற அடைமழைக் காலத்தில் அதிகாலை 6 மணிக்கு நல்ல நேரம் என்று கருதி திருமணத்தை நடத்துவதை நாம் காண்கிறோம். காலைக்கடனை முடிக்க கழிவறையைத் தேடும் நேரத்தில் மழைக்கும் புயலுக்கும் நடுவே திருமணத்தை நடத்தி முடித்தே தீரவேண்டிய கட்டாயம் என்ன வந்தது?
இந்துக்கள் பெரும்பான்மையாக திருமணத்தை நடத்தும் ஆவணி மாத முகூர்த்த (வளர்பிறை) நாளில்தான் தமிழகம் முழுதும் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதில்லை; காய்கறித் தட்டுப்பாடு, வாழைஇலை, பழங்கள், பூமாலை என அனைத்திற்கும் தட்டுப்பாடு; அதனால் விலையேற்றம்; பேருந்துகளில் கூட்ட நெரிசல் என்று ஒரு செயற்கையான நெருக்கடியை இந்த நல்ல நாள் ஏற்படுத்துகிறது.
இந்துத் திருமணமுறை தாலி , பார்ப்பனச்சடங்கு, வரதட்சணை போன்ற வற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையோர் இவ்வாறு திருமணத்தை மேற்கொள்வதால் ஏற்படும் நெருக்கடியை எல்லோருமே சந்திக்க வேண்டியுள்ளது.
இத்திருமண முறையை இன்று பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரும் ஆதிக்கச் சாதியினர் முதல் அருந்ததியர் வரை கடைப்பிடிக்கின்றனர். பார்ப்பனர்கள் இந்துக்கடவுள்களுக்குத் திருமணம் நடைபெறும் (ஆடித் திருக்கல்யாணம் ) ஆடி மாதத்தில் தங்களது இல்லத் திருமணங்களை நடத்திக் கொள்வர். ஆடியும் மார்கழியும் அவர்களுக்கு மட்டும் நல்ல மாதங்கள். இத்தகையநிலையில் இந்த நல்ல (முகூர்த்த) நாள் என்ற ஏற்பாட்டால் தொழில் உற்பத்தித் துறையில், வணிகத்துறையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் பற்றியும் நாம்சிந்திக்க வேண்டியுள்ளது.
இங்கு தமிழ்ச்சமூகத்தில் (சிறுதொழில்) பொருள் உற்பத்தி என்பது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கு என்று மட்டுமல்லாமல் பிரதானமாக பண்பாடு சார்ந்ததாகவும் இருக்கிறது. அதாவது தமிழர்களின் அன்றாடத்தேவை சார்ந்த கொள்முதலை மட்டும் நம்பி இங்கு பொருள் உற்பத்தி அமையுமேயானால் அது ஒரே சீராக இருக்கும்.
மாறாக குறிப்பிட்ட மதப்பண்பாடு சார்ந்த நாட்களை மய்யப்படுத்திய நுகர்வு மேலோங்கி இருப்பதால், ஆண்டின் சில நாட்களை மய்யப்படுத்திய நுகர்வாக இருப்பதால் தொழில், வணிகம் ஒரு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு இந்துக்கள் தம் இல்லத்திருமணத்தை முன்னிட்டு கொள்முதல் செய்யும் மளிகைப் பொருட்கள், ஆடை ஆபரணங்கள் மற்றும் சீர்சாமான்கள் எனப்படும் கட்டில், மெத்தை, கிரைண்டர், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் போன்றவற்றில் கிரைண்டர் அல்லது ஸ்டீல்பீரோ என்பனவற்றின் உற்பத்தியைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.
முன்நாளில் ஆட்டுக்கல் , அம்மி வாங்கியவர்கள் காலமாறுதலுக்கு ஏற்ப இன்று கிரைண்டர் , மிக்ஸி வாங்குகிறார்கள். இந்தக்கிரைண்டர் எனப்படும் மாவு அரைக்கும் இயந்திரம் நகர்ப்புறங்களில் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. எனவே வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அவசியம் எனக்கொள்ளலாம். எனவே கிரைண்டர் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் கையில் கூடுதலாக பணம் புழங்கும் நேரத்தில் கிரைண்டர் வாங்கலாம். இன்றைக்குப் பெரும்பாலும் அரசு போனஸ் வழங்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த கிரைண்டர் அல்லது பிற பொருட்களின் விற்பனை கூடுதலாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு இந்தப் பொருட்களின் விற்பனை என்பது கல்யாண சீசன் என்று சொல்லக்கூடிய ஆனி, ஆவணி, வைகாசி என்ற மாதங்களின் முகூர்த்த நாட்களை மய்யப்படுத்தியதாகவே இருக்கிறது. ஏனென்றால் இவை பயன்பாட்டிற்காக வாங்கப்படுவதில்லை. மாறாக, சீர் கொடுப்பதற்காகவே வாங்கப்படுகின்றன. இவ்வாறு சீருக்காக வாங்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை மூட்டையாகக் கட்டப்பட்டு ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்து இந்துவின் வீட்டின் மூலையிலும் தூங்கிக் கொண்டிருப்பது தனிக்கதை.
ஆக இப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில் பட்டறைகள் முகூர்த்த காலத்தில் அதிகமாக இவற்றை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்நிலைக்கு நேர் எதிராக முகூர்த்தமில்லாத ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களிலும் பிற மாதங்களின் முகூர்த்தமற்ற காலத்திலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். ஒரு தொழில் நிறுவனத்திற்கு இது எவ்வாறு சாத்தியம்? மேலும் முகூர்த்த காலத்தில் தேவையை ஒட்டி கூடுதலாகத் தொழிலாளரைச் சேர்த்தால் பிற முகூர்த்தமற்ற நாட்களில் அவர்களுக்கு வேலை கொடுக்கவும் சம்பளம் கொடுக்கவும் முடியுமா ? அதே போல்தான் இப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகர்களுக்கும் , கடைகளுக்கும் நெருக்கடி. திருமணசீசனில் ஒரேநாளில் சமாளிக்க முடியாதவாறு வாடிக்கையாளர்கள் வந்து குவிவதும் அவர்களைக் கவனிப்பதற்கு ஆள் பற்றாக்குறையின் காரணமாக வாடிக்கையாளர் வருத்தமுற்றுத் திரும்பிச்செல்வதும் மற்றொருபுறம் வாடிக்கையாளர் விரும்பும் பொருள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் கையைவிட்டுப் போவதும் என்ற நிலையில் வணிகநிறுவன உரிமையாளருக்கு ஏற்படும் மனஉளைச்சல். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரக்கூடிய நெருக்கடியாகும்.
இந்தவிதமான நெருக்கடிக்கு மாறாக ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களில் தொழில் துறையினரும் வணிகர்களும் சந்திக்கின்ற நெருக்கடி வேறுவிதமானது. அன்றாடச் செலவுகளுக்கும், மின்கட்டணம், தொலைபேசிக்கட்டணம், வேலையாள் சம்பளம், கடைவாடகை போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் சரக்கு சப்ளை செய்தவர்களுக்குக் குறித்த தேதியில் பணம் கொடுக்க முடியாத நிலையும் என்று இது இன்னொரு விதமான நெருக்கடி. இந்த நேரத்தில்தான் சிறு வியாபாரிகள் வட்டிக்குக் கடன் வாங்கி பிறகு அது தொடர்கதையாகி இறுதியில் தனது கடையையே இழந்து தெருவில் நிற்கும்படியாகிறது.
ஓரளவு வசதியான பின்புலமுள்ள வணிகர்களாலேயே இந்த நல்லநாள் என்ற பண்பாடு ஏற்படுத்தும் நெருக்கடியை ஈடு கொடுத்துச் சமாளிக்க முடிகிறது. மற்ற சாமானியர்களுக்கு இந்த இந்துமதம் சார்ந்த நல்லநாள் என்பது குழிபறிக்கும் நாளாகவே இருக்கிறது.
அடிக்குறிப்பு ‡ 1 :
இவ்விடத்தில் வரதட்சணை, சீர் என்பதே கூடாதது, தவறானது என்ற கருத்துதான் சரியானது, முற்போக்கானது என்றாலும் இன்றும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த வழக்கம் ஆதிக்கம் செய்து வருகின்ற நிலையில் அதை ஒட்டியே சிறு தொழில் உற்பத்தி , வணிகம் இயங்குகின்ற நிலையில் இந்த முகூர்த்த நாட்கள் என்பவை எவ்வாறு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
கடந்த 2008‡ ஆம் ஆண்டின் மொத்த சுப முகூர்த்த நாட்கள் 54. இதிலும் வளர்பிறை முகூர்த்தநாட்கள் என்பவை சனவரியில் ஒன்று, பிப்ரவரியில் இரண்டு, மார்ச்சில் நான்கு, ஏப்பிரலில் இரண்டு, மேயில் மூன்று, ஜுனில் இரண்டு, ஜூலையில் ஒன்று, ஆகஸ்ட்டில் கிடையாது, செப்டம்பரில் நான்கு, நவம்பரில் மூன்று , திசம்பரில் மூன்று. ஆக மொத்தம் 25 நாட்கள். இந்த 25 நாட்களில்தான் தமிழகத்தின் ஒட்டு மொத்தத் திருமணங்களும் நடைபெறுகின்றன. இன்று இந்துக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மற்றொரு போக்கு வெள்ளிக்கிழமை இரவு வீட்டு வாசலில் கற்பூரம் கொளுத்துவது; அதே போல் வணிகர்கள் கடைமூடும் வேளையில் கற்பூரம் ஏற்றி தேங்காயை கடைஎதிரே வீதியில் சிதறடிப்பது என்பதுமாகும். காரைக்குடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 1000 தேங்காய்கள் வீணடிக்கப்படுகின்றன. வீட்டுச்சமையலுக்கு முழுத்தேங்காய் வாங்கமுடியாமல் இன்றும் தேங்காய்ச்சில் வாங்கிச் செல்லும் ஏழைகள் வாழும் ஊரில் மாதம் 5000 க்கும் அதிகமான தேங்காய்களை வீதியில் அடித்து வீணடிக்கின்றனர்.
இதுபோல் காலத்தின் ஒவ்வொரு நாளின் மீதும் புதிது புதிதாக நம்பிக்கைகளை பிழைப்புவாதிகள் , சோதிடர்கள் , மதவாதிகள் , பார்ப்பனர்கள் , வியாபாரிகள் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றனர். சமீபத்திய உற்பத்தி ‘அட்சயதிதி’ ‡ அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற வழக்கம். இதற்கு முன்பதிவு செய்யும் அளவிற்கு இன்று நிலைமை முற்றிவிட்டது.
அன்றைய நாளில் மட்டும் பல கோடிகளுக்குத் தங்கம் விற்பனையாவதாகப் புள்ளிவிபரங்கள் போட்டி போடுகின்றன. இந்த மூடத்தனத்தில் வங்கிகளும் (ணூளீணூளீணூ வங்கி அட்சயதிதி அன்று தங்கக்காசு விற்பனையை அமோகமாகச் செய்கிறது) இதையயல்லாம் காணும் போது இந்த இந்துக்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேறுயாரும் உண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனையும் சுற்றிவருவதால் ஏற்படும் மாறுதல்களையே பகல், இரவு, காலை, மாலை, முற்பகல், பிற்பகல், நன்பகல், முன்னிரவு, பின்னிரவு, நள்ளிரவு, எனவும் இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் மாறுதல்களையே நாள் , வாரம், ஆண்டு என பலவாறு கணக்கிடுறோம். இவ்வாறு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிடும்போது அந்த 24 மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தை மட்டும் இராகுகாலம், எமகண்டம் என்றும் மற்றொரு நேரத்தை சுபமுகூர்த்தம் என்றும் கூறுவதும், அதே போல் பூமி சூரியனைச்சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவான 365 நாள்களில் ஒரு சில நாள்களை மட்டும் நல்லநாள்கள் ( முகூர்த்த நாள்கள் ) எனக் கருதுவதும் அறியாமை, மூடத்தனம் என்பதை சித்தர்கள் துவங்கி பெரியார்உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழர்கள் அறிவு பெற்ற பாடில்லை.
நியாயமாக இவ்விடத்தில் தமிழர்கள் என்று பொதுவாகக் கூறுவது தவறாகும். ஏனெனில் இசுலாமியர் இவ்வாறு நல்லநேரம் பார்த்துத் திருமணம் போன்றவற்றைச் செய்வதில்லை 1 ஆ: எனவே இந்துக்கள் என்று கூறுவதே சரியாகும். ஆக, இந்துக்கள் இன்றைய நவீன யுகத்திலும் 2000 ஆண்டு வழக்கமான நாள் நட்சத்திரம் பார்த்துச் செயல் ப டு வ ç த த் தொ ட ர் வ து வினோதமும் வேடிக்கையுமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரம் பார்த்துச் செயல்பட்டது முட்டாள்தனமில்லை. அன்று வானமும் , நிலவும், நட்சத்திரங்களுமே காலம், திசைகாட்டும் கருவி. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக்கூட்டம் வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றினால் மழைவரும் என்பதைத் தனது அனுபவத்தில் கற்றிருந்த அன்றய மனிதன் உடனே விதைத்தான். இதுபோல் வானில் நட்சத்திரக் கூட்டங்களின் வடிவம், இடம் இவற்றைக் கண்டே தன் அன்றாடப்பணிகளை மேற்கொண்டான். பின்பு இதுவே வழிகாட்டும் பதிவாக மாறி ஆவணப்படுத்தப்பட்டு பஞ்சாங்கம் என்ற பெயர் பெற்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் கூறும் செய்திகளைக் கேட்டு விவசாயிகள் செயற்படுவதைப் போல் அன்று பஞ்சாங்கத்தைப் பார்த்து மனிதர்கள் செயல்பட்டனர்.
ஆனால் காலப்போக்கில் பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போன்றவை இடைச்செருகப்பட்டு பார்பனியமயமாகிப் போனதாக த. வி. வெங்கடேசுவரன் கூறுகிறார். (நாள் என்னசெய்யும், கோள் என்னசெய்யும் நூலில் ...) அந்தப் பழைய பஞ்சாங்கத்தையே இன்றும் பார்த்துத் தங்களின் செயல்களை இந்துக்கள் மேற்கொள்வது மிகவும் மூடத்தனமாகும். இன்று எவரும் வானத்தைப்பார்த்து நேரம் சொல்ல வேண்டியதில்லை; திசை சொல்லவேண்டியதில்லை. முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்கள் இரவில் வானத்தை, நிலவை, நட்சத்திரத்தைப் பார்த்துத் தங்களின் பயணத்தின் திசையையும், நேரத்தையும் கணித்துக் கொண்டனர். இன்று திசை காட்டும் கருவி, அலைபேசி (துலிணுஷ்யிe ஸ்ரீஜுலிஐe) ழழியிவதீ வீழியிவதீ போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் மழை,புயல் போன்றவற்றால் வானம் சரிவரத்தெரியாமல் திசையையும்,நேரத்தையும் சரிவரக் கணிக்கமுடியாமல் அவதிப்படும் நிலை தற்போது நவீனக் கருவிகளின் பயன்பாட்டின் காரணமாகக் குறைந்துள்ளது.
ஆக காலத்தால், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால் மக்கள் மாறவேண்டும். ஆனால் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துத் திருமணம், வீடு குடிபுகுதல், தொழில் துவங்குதல் போன்ற செயல்களை இந்துக்கள் இன்றும் கைவிடாமல் தொடர்வதால் ஏற்படும் சிரமங்களை, நெருக்கடிகளைப்பற்றி சமூக அக்கறையுள்ள யாரும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் சமூக அக்கறைகொண்டு அரசியல் இயக்கங்களில் செயல்படும் தோழர்களே கூட இந்த நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றைப் பற்றித் தெரிந்தே கண்டும் காணாமல்விடுவது அல்லது கவனமின்றிக் கடைப்பிடிப்பது போன்ற நிலைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
முதலாளிய, பார்ப்பனிய இயக்க, கட்சித் தோழர்களைப்பற்றி நாம் இங்கு கூறவில்லை. சமூக மாறுதலுக்காக நிற்கும் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தமிழ்தேச விடுதலை, சாதி ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கம், பெண் விடுதலை இயக்கம் சார்ந்த தோழர்களைப் பற்றியே இங்கு கூறுகிறோம். நமக்குத் தெரிந்தவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தோழர்கள் நல்லநாள், நேரம் பார்த்தும் சடங்கு சம்பிரதாயங்களோடு சுயசாதித் திருமணங்களையே நடத்துக் கொள்கின்றனர். விதிவிலக்கான ஒரு சிலரும் தங்களின் சுயபுரிதல், நேர்மையின் காரணமாகத்தான் சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணங்களை மேற்கொண்டனரே தவிர இதில் கட்சிக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.
இது நாள் வரை பெரும்பான்மையான கட்சித் தோழர்கள் மத்தியில் சாதி, சடங்கு விசயத்தில் பெரிய விழிப்புணர்வோ, கவனம் குவிக்கப்படவோ, நாம் செய்வது சரியா? என்ற கேள்வி எழும் நிலையோ ஏற்படுத்தப்படவே இல்லை. மேலும் வேதனை என்ன வென்றால் இதுபோன்ற சுயசாதி, சுபமுகூர்த்த, சடங்கு சம்பிரதாயத் திருமணங்களுக்கு கட்சித்தலைமைத் தோழர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்குவது ஏதோ புரட்சிகர மாநாடு போல செங்கொடி கட்டியும், பேனர்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருப்பதும் தான்.
ஒரு வேளை புரட்சிக்குப்பிறகு ஒரு சோசலிச அதிகாரம் நிறுவப்பட்டபின்புதான் இதுபோன்ற பண்பாட்டு விசயங்களில் கவனம் குவிக்கவேண்டும்; அது வரை ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற தெளிந்த முடிவோடே இவ்வாறு பெருந்தன்மையாகச் செயல்படுகின்றனரோ என்று கருதவேண்டியுள்ளது.
ஏனென்றால் எனக்குத் தெரிந்த (னி.ஸி) மார்க்சிய இலெனினிய இயக்கத்தோழர்கள் பலரும் இது போன்ற புரிதலில் தான் இருந்தனர்; செயல்பட்டனர். குறிப்பாக 70களில் மிகத்தீவிரமாக செயல்பட்டுத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு சிறைசென்ற தோழர் ஒருவர் இந்த சாதி, சடங்கு, நாள்நட்சத்திரம் போன்ற விசயங்களில் எவ்வித மறுப்பும் கூறாமல் குடும்பத்தாரோடு உடன்பட்டுப் போனதோடு நம்மோடு விவாதிக்கும்போது ‡ ‘இவையயல்லாம் புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தில்தான் மறையும்; அதுவரை இதற்கெதிராகப் போராடவோ, மாற்ற முயற்சிக்கவோ கூடாது’ என‡விவாதிக்கவும் செய்தார்.
இந்த விதப்புரிதல் கொண்ட தோழர்கள் சி.பி.அய், சி.பி.எம், சி.பி.அய். (எம்‡எல்) என்ற மூன்று இயக்கங்களிலும் பரவலாக உள்ளனர். ஏனென்றால் பண்பாட்டு விசயத்தில் கறார்தன்மையும், உறுப்பினர் தகுதியில் ஒன்றாக பண்பாட்டு நடவடிக்கைகளை இணைக்காததும் இதற்குக் காரணமாகும்.
இதேநிலை தமிழத்தேசிய இயக்கங்களிலும் காணப்படுகிறது. திராவிடர் கழகங்கள் இவ்விசயத்தில் ஓரளவு முன்னேறி உள்ளன எனலாம். ஏனெனில் அவை பார்ப்பனிய பண்பாட்டு விசயங்களை மய்யப்படுத்தி அவற்றிற்கெதிராக இயங்குவதால் இ ந்நி ç ல. ஆனால் அ தி லு ம் ¼ த V ழர்க ள் ப ல ரு ம் சுயசாதித்திருமணங்களை மேற்கொள்வதே அதிகமாகும். அடுத்து தாலி மறுப்பு, பார்பனியச் சாதிமறுப்பு, சடங்கு மறுப்பு என முற்போக்காக மேற்கொள்ளப்பட்ட சில திராவிடர்கழகத் திருமணங்கள் கூட இந்துக்கள் நம்புகின்ற அதே நல்ல (முகூர்த்த) நாளில் நடைபெற்றது ஏன் என்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
கவனமின்மை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் சாதி என்ற கொடூரமானதும், கெட்டிதட்டிப்போன ஒன்றையே புறக்கணித்த தோழர்களுக்கு இந்த ‘நல்ல நாள்’ என்ற மூடநம்பிக்கையைப் புறந்தள்ளுவதா கடினம் என்ற கேள்வியும் எழுகிறது.
அண்மையில் முன்னாள் கம்யூனிஸ்டு (நக்சல்பாரி), இன்னாள் ‡ தியாகி இமாணுவேல் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணியின் ‡ செயல் வீரருமான தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த மூத்த தோழர் நமசு, தோழர் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ என்ற நாவல் மீதான விமர்சனக் கூட்டத்திற்கு (30.11.2008 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி) ஏற்பாடு செய்திருந்தார். கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்கள் 150. நூறுபேர் வருவார்கள் என்றார்; (தோழர் நமசுவுக்கு 30.11.2008 அன்று முகூர்த்தநாள் எனத் தெரியவில்லை) ஆனால் கூட்டத்திற்கு இருபது நபர்களுக்குள்ளாகவே வந்திருந்தனர். இதுதான் இன்றைய நிலை. கலை இலக்கிய அரசியல் கருத்தரங்குகளை சனி, ஞாயிறு போன்ற நாட்களிலேயே இன்று பெரும்பாலும் நமது தோழர்கள் நடத்துகின்றனர். ஏனெனில் கலந்து கொள்பவர்களின் அலுவலகப்பணி பாதிக்கக்கூடாது என்பதால்தான். இன்று இதே நோக்கிலேயே இந்துக்களும் ஞாயிற்றுக்கிழமையில் வரும் முகூர்த்தநாளைத் தேர்வுசெய்து திருமணத்தை நடத்துகின்றனர். இந்துக்கள் தங்களின் சடங்கு சம்பிரதாயத்தை, நம்பிக்கையை நவீனச்சூழலுக்கு ஏற்பவும் அதே சமயம் கைவிடாமலும் தொடர்ந்து கட்டிக்காத்து வருகின்றனர்.
இனிமேல் நமது தோழர்கள் கூட்டங்களை, கருத்தரங்குகளை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்தவேண்டும். ஏனென்றால் சனியும் செவ்வாயுமே இந்துக்களைப் பொருத்தவரை மோசமான(?!) நாட்களாகும். வேறு என்ன செய்வது! நம்மால் பெரும்பான்மையான மக்களை (இந்துக்களை) மாற்ற முடியாதபோது, மேலும் சமூகமாற்றத்திற்காக நிற்கும் நம்மாலேயே (மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வாதிகளாலேயே) நல்ல நாள், நேரம், முகூர்த்தநாள் போன்ற பார்ப்பனிய மூடத்தனத்தை எதிர்த்து, மீறி இல்ல நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாதபோது குறைந்தபட்சம் நமது குடும்ப உறுப்பினர், உறவினரோடு எதிர்த்துப் போராடி தோற்றுப்போகாமல் கூட அப்படியே அவர்களின் விருப்பத்திற்குட்பட்டுப் போகும் நிலையில் கலை இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், போராட்டங்கள் ஏன் புரட்சியேயானால் கூட இந்துக்களின் முகூர்த்த நாள் நல்லநாள் தவிர்த்த பிற கரிநாட்களில் (அமங்கலநாட்களில்) எமகண்டம், இராகுகாலத்தில் துவங்குவதே சரியாகும் என்று தோன்றுகிறது.பின்குறிப்பு : தோழர்களே! இக்கட்டுரை தனிநபர் எவரையுமோ அல்லது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களையோ கட்சிகளையோ இழிவு செய்யும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக என்னையும் உள்ளடக்கி நமது தோழர்கள் மத்தியில் உள்ள நாள், நட்சத்திரம் குறித்த விழிப்புணர்வற்ற நிலையையும், பார்ப்பனியத்திற்குப் பலியாகிப்போயுள்ள நிலையையும் சுட்டிக்காட்டி சிந்திக்கத்தூண்டுவதற்காகவும், "இல்லை! நாள் நட்சத்திரம் பார்ப்பதால், பார்ப்பனியச் சடங்குகளை மேற்கொள்வதால் சமூகமாறுதலுக்கோ புரட்சிக்கோ, குறைந்தபட்சம் சமூக முன்னேற்றத்திற்கோ ஒரு கேடும் வந்துவிடப்போவதில்லை" என்று கருதும் தோழர்கள் மனம்திறந்து வெளிப்படையாகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே தோழர்கள் திறந்தமனதோடு இதுகுறித்து ஒரு விவாதத்தை (அ) உரையாடலை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்துக்கள் என்போருக்கு இங்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓர்வழிமுறை (சாதிரீதியான வழிமுறை) வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பிற மதத்தினருக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மதமற்ற, சாதியற்ற, சமூகமாற்றத்திற்காகப் போராடுபவர்கள் என்போருக்கான பண்பாட்டு வழிமுறைகள் என்ன? என்பதுபற்றிய தெளிவான வழிகாட்டல்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் இதுவரை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா அல்லது அப்படி எதுவும் தேவை இல்லையா என்பது பற்றியும் தோழர்கள் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
அடிக்குறிப்பு 1 :
இவ்வளவு காலமாக சாதி இந்துக்களிடம் செல்வாக்கோடு இருந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் பார்த்தல் போன்ற வழக்கங்கள் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மத்தியிலும் வெகுவாகப் பரவிவருகிறது. காரைக்குடியில் ஒரு பகுதியைச் சேர்ந்த அருந்ததியரில் எவராவது ஒருவர் இறந்துவிடும்போது அப்பகுதியின் தெரு முக்கியஸ்தர்கள் நான்குநபர்கள் சோதிடரிடம் சென்று ‘இவர் இத்தனை மணிக்கு இறந்துவிட்டார், எத்தனை மணிக்கு பிணத்தை எடுக்கலாம்’ என நேரம் குறித்து வந்தே மற்ற காரியங்களைப் பார்க்கிறார்களாம்.
அச்சோதிடன் சாவுக்கு நேரம் குறித்துச் செல்ல வந்த அருந்ததியர்களைத் தன் வீட்டு வாயிலிலேயே நிறுத்தி நேரம் குறித்துக் கொடுத்து ரூ.51 தட்சணை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவானாம். இச்சோதிடம் பார்த்துச் சடலம் எடுக்கும் வழக்கம் மிகச் சமீபமாகத்தான் பரவிவருவதாகவும் முன்பு காலண்டரைப் பார்த்து நல்ல நேரம் குறித்துக் கொண்டதாகவும் கூறினர்.
அடுத்து அண்மையில் பெய்த கனமழையின்போது என் துணைவியார் வழி உறவினர் ஒருவரின் வீட்டுச்சுவர் விழுந்துவிட்டது. உடனடியாக வேறு வீடு வாடகைக்குக் கிடைக்காமல் அவர்கள் பட்ட துயரமும், வீடுதேடிப்போன இடங்களில் அருந்ததியர் என்றதால் வீடுதரமறுத்து சாதித் திமிரன்/ள் கள் கூறிய காரணங்கள் நாகரிக (?!) தமிழ்ச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியவை.
அது ஒருபுறம் இருக்க அவ்வுறவினர்கள் ஒவ்வொரு சோதிடனாகத் தேடிச் சென்று தங்களின் துயரங்களுக்கான காரணம் என்ன? என்று ஜாதகம் பார்த்து அலைந்து திரிந்தது வேதனையிலும் வேதனை.
அடிக்குறிப்பு ‡ 1 அ :
இன்றைக்குச் சில்லரை வணிகம், உள்நாட்டுச் சிறு தொழில் போன்றவை உலகமயம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தலையீடு போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகி நசிந்து போய்க் கொண்டிருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இது மேலிருந்து அல்லது வெளியிலிருந்து திணிக்கப்படும் நெருக்கடி என்றால் பார்ப்பனியப் பண்பாட்டுத் தேவையை மையமாகக் கொண்டு இயங்குதல் என்பது சிறுதொழில், வணிகத்தின் உள்ளிருந்து அல்லது கீழிருந்து கொல்லும் நோயாக இருக்கிறது எனலாம்.
அடிக்குறிப்பு ‡ 1 ஆ :
இசுலாம் மார்க்கத்தில் இவ்வாறு நல்லநேரம் என்பது இல்லாவிட்டாலும் இன்று நடைமுறையில் இந்துக்களைப் பார்த்து இசுலாமியரும் பல்வேறு மூடத்தனங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்துக்களைப் போலவே சனியையும், செவ்வாய்க்கிழமையையும் திருமணத்திற்கு ஏற்றநாள் அல்ல என்று ஒதுக்குகின்றனர். அதுபோல் சில பகுதிகளில் சோதிடம் பார்த்தல், மந்திரித்து தாயத்துக் கட்டுதல் போன்ற வழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தங்கள் மதத்திற்குள் வந்துவிட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்யாமல் சமமாகவும் திருமண உறவுகளை மேற்கொள்ளும் அதே வேளை இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்களைப் போலவே ஒதுக்கிப்பார்க்கும் வழக்கமும் நிலவுகிறது.
கிராமப்புறத்தில் இசுலாமியரிடம் இந்தவிதப் போக்குகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழகக் கிறித்தவர்களைவிட இசுலாமியரிடம் பார்ப்பனியம் குறைவாகச் செல்வாக்குச் செலுத்துகிறது என்று வேண்டுமானால் கூறலாம். மற்றபடி பார்ப்பனியப் பண்பாட்டின் கொடிய விசநாக்குத் தீண்டாத மனிதர் இங்கு எவருமில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
அடிக்குறிப்பு ‡ 2 :
இந்த மூத்த தோழர் கூறுகின்ற கருத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற வகையில் ‘செப்டம்பர் 2008 தீராநதி’ இதழில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. "சிண்டு வைத்த மாவோயிஸ்ட், பூணூல் அணிந்த மாவோயிஸ்ட், ருத்ராட்சக் கொட்டை அணிந்த மாவோயிஸ்ட்டுகளையும் கூடச் சந்திக்க நேரிட்டது. ‘இதெல்லாம் என்ன’ என்று அன்று மாலை உள்ளூர்த் தோழர்களிடம் கேட்டபோது ‘ஆமாம் இங்கு இது ஒரு பிரச்சனைதான்; என்ன செய்வது?. இங்குள்ள கலாச்சாரம் அப்படி’ என்று சமாளித்தார்கள்..." (தோழர். அ.மார்க்ஸ். ‘சிறைப்பட்ட வாழ்வுகள்’ கட்டுரையில்)
ஜார்கண்ட் மாநிலச் சிறையில் வாடும் மாவோயிஸ்டுகளைப் பற்றிய உண்மையறியும் குழுவில் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையே தோழர் அ.மார்க்ஸ் மேலே குறிப்பிடுகிறார். மேலும் அ.மார்க்ஸ் இப்படிக் கூறுகிறார். "கலாச்சாரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. கலாச்சார எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்ததுபோல இங்கு நடக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என நினைத்துக்கொண்டேன். ‘தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை’ என்று மட்டும் சொன்னேன்"
அடிக்குறிப்பு ‡ 3 :
எனக்குத் தெரிந்தமட்டிலும் ம.க.இ.க ‘பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறைகள்’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டு உள்ளதாக அறிகிறேன். அதில் கம்யூனிஸ்ட் என்பவர், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளன. மேலும் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய முறையில் ஒரு சராசரி பெற்றோரிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு மாறுபட்டுள்ளனர் என்பது பற்றியயல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாக நினைவு. ம.க.இ.க தோழர்கள் எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்நூலைப் பிற இயக்கத்தவர் ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட விவாதத்திற்குரியதாக மாற்றலாம். ஆனால் இங்கு நிலவும் கட்சித் தீண்டாமை, இயக்கத்தீண்டாமைச் சூழலில் இது பேராசைதான். மேலும் கட்சியையோ, இயக்கத்தையோ சாராத தனிநபராக செயலற்று இருந்தும். பிற அனைவரையும், அனைத்து இயக்கங்களையும் தனக்கும் தன் சிந்தனைக்கும் கீழான புழுவைப்போல் பாவிக்கும் தன்னகங்காரப் பேர்வழிகள் நிரம்பிய சூழலில் பிற இயக்க வெளியீட்டைப்படித்துப் பரிசீலிப்பதும், ஏற்றுக்கொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அழகான ஆசைதான்!
இதுபோன்ற மற்றொரு நூல் சிலிக்குயில் பதிப்பகம் 1986‡ஆம் ஆண்டு வெளியிட்டதான எரிதழல் எழுதிய ‘பண்பாடும் புரட்சியும்’ ஆகும். எரிதழல் என்ற புனைப்பெயரில் எழுதியவர் தோழர்.அ.மார்க்ஸ் என்று தெரியவருகிறது. அன்று அவர்சார்ந்திருந்த புரட்சிப்பண்பாட்டு இயக்கம் கொண்டிருந்த நிலைப்பாடாகவும் இந்நூலின் கருத்துக்களை நாம் கொள்ள முடியும்.
இந்நூலில் பண்டிகைகள், திருவிழாக்கள், கூட்டுவழிபாடுகள் பற்றியும் நம் தோழர்கள் இவற்றை அணுக வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலையும் இன்றும் வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியமானதேயாகும்.
நல்ல நேரம்
தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும் :- குமரன்தாசு
மதிப்பிற்குரிய ஐயா, பி.இரா .அரசெழிலன் ,ஆசிரியர்: நாளைவிடியும் , இருதிங்களிதழ்,திருச்சி ,அவர்களால் குமரன்தாசு அவர்களின் ஆக்கத்தை எனது பார்வைக்கு முன்பு அனுப்பி வைத்த மின்னஞ்சல் இது .
உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன் .
நன்றிகள் குமரன்தாசு மற்றும் அரசெழிலன் ஆகியோருக்கு .
.
.மீள்வு.
Tweet |
|
4 கருத்துகள் :
சீர்படுத்தும் கருத்துகள்...
பஞ்சாங்கம் பார்க்கிறவர்கள் பார்த்து விட்டு போகட்டும் ,நாம் அதனைப் புறக்கணிப்போம்!
நல்ல ஆராய்ச்சி.
அருமை நண்பரே
நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "