எனது நண்பன் ரகுவின் வீட்டிற்கு இன்று காலை உணவுக்கு அழைத்திருந்ததால் சென்றிருந்தேன் .பொதுவா நான் வெளியே எங்கும் அதிகம் செல்வதில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,வேலைப்பளுவே முதன்மையானதாகும் . ஆனால் ,ரகு அழைத்தால் தட்டுவதில்லை மகிழ்வுடன் தலையாட்டிவிடுவேன் .
காரணம் ,வாருங்கள் தோழா என வரவேற்பதிலிருந்து வீடு திரும்பும் வரை தமிழின் இனிமையில் குளித்து, புதுப்புது வார்த்தைகளையும் தெரிந்துகொள்ளலாம் என்பதால்.
8 மணிக்கே சென்றுவிட்டோம் .பொதுவா 9.30க்குத்தான் காலைஉணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் அதுவரை அவரின் அறையில் பேசிக்கொண்டிருக்களாம் என அமர்ந்திருந்த பொழுது.அவரைக்காண சிலர் அப்பொழுது வந்தனர். அறைக்குள் வரும்படி அழைத்தார் அவர்களை.
வந்தவர்களின் எண்ணிக்கையோ 3 .இருந்த அதிகப்படியான இருக்கைகளோ 2 அதனால் ஒருவர் நின்றுகொண்டிருக்கவேண்டிய சூழல் .நான் எழுந்து ஒருவரை அமர அழைத்தேன் .அதற்கு ரகு இருக்கட்டும் தோழா என கையமர்த்தியதோடு , இளவலை அழைத்து ,தம்பி தோழருக்கு ஒரு ''அமர்வு ''கொண்டுவாருங்கள் என்றார். மற்றவர்களை நீங்கள் அமருங்கள் ''அமர்வு'' வருகிறது என்றார் .எனக்கு அந்த சொல்லை பயன்படுத்திய விதம்,இடம் ,இனிமை ,மிகவும் பிடித்திருந்தது .
சொல்லும் மிகவும் உயர்வாகவும் ,உன்னதமாகவும் இருந்தது .என்னை மிகவும் பரவசப்படுத்தியது .அமர்வாக ஒரு பிளாஸ்டிக்சேரை கொண்டுவந்து வைத்தான் தம்பி முகிழ் .
வந்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தை தெரிவித்தனர் .
தங்களின் உறவுப்பையன் ''விருப்பமணம்'' செய்துகொண்டதாகவும் .அதற்கு பெண் வீட்டில் அதிக எதிர்ப்பு இருப்பதால் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை வேண்டிவந்ததாகவும் .என்ன செய்தல் நலம் என்றும் வினாவனர் .
எனக்கு நான் ''விருப்பமணம்'' என்றால் என்ன ? என சற்றே குழம்பினேன் .
அவர்களின் பேச்சிலிருந்து காதல் திருமணத்தைத்தான் அவ்வாறு அழைக்கின்றார்கள் என்பதனை யூகித்துக்கொண்டேன் .கவுரவக்கொலைகள் செய்யும் சமூகத்தில் உழன்றுகொண்டிருக்கின்றோம். என்ன கொடுமையடா ? என மனம் வெம்பியது .
காவல் நிலையம் செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்
அவர்கள் சென்றதும் ,''விருப்பமணம்'' என்றால் ''காதல் திருமணம்''தானே என வினாவினேன் .
தோழா,''விருப்பமணம்'' என்பது ஒருவரை ஒருவர் விரும்பி மணம் ஒப்பி இல்லறத்தில் ஈடுபடுவது .இன்றைக்கு என்னதான் கல்வி மக்களுக்கு புகுத்தப்பட்டிருந்தாலும் ,அவர்கள் பழமையினின்று மீண்டுவர இன்னும் அதிக காலம் ஆகும் .காதல் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது . காதல் என்பது மிகவும் அசிங்கமானது என்றும் ,அது கூடாத ஒன்று என்றும். தவிர்க்கக்கூடியது என்றும்,தேவையில்லாதது என்றும், செய்யக்கூடாத செயல் என்றும் ,சமுதாயக்கோடு என்றும், பலவாறாக பலவிதத்தில் முன்பு காதலித்தவர்களே பேசி வருவதினின்று ,இது சமுதாயத்தில் ஒரு அவலச்சொல்லாக உலவுகிறது .காதலிப்பவர்களே கூட நாங்கள் காதலிக்கின்றோம் என கூற தயக்கம் காட்டுவதை உணர்ந்திருப்பீர்கள் . அந்த அளவிற்கு அந்த வார்த்தை காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படுகிறது . நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறுவதை விட நாங்கள் விருப்பமணம் செய்துகொண்டோம் என்ற பதத்தில் காதலில் உள்ள காமம் மறைந்து அவர்களின் அன்பும் ,தூயஉள்ளமும் அதிகம் தெரிகின்றது .கண்ணியம் தெரிகிறது .விருப்பமணம் என சொல்வதிலே பக்குவப்பட்ட தன்மை தெரிகிறது . மேரோஜ் என ஆங்கிலத்தில் பேசி ஒளியாது ,சுந்தரத்தமிழில் பேசி நிமிர முடிகிறது . எனது அனுபவத்தில் தனது மகளின் காதல் கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் விருப்பமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார் .அதற்கு காரணம் விருப்பமணத்தில் காமம் இல்லை,பணம் இல்லை, ஆசையில்லை ,அன்பும் ,தூய உள்ளமும் ,பாதுகாப்பும் உள்ளது என எண்ணியதால் .காதல் என்றாலே அதை கடந்து சென்றவர்கள் உட்பட அனைவருக்கும் கசப்பதால் இரு உள்ளங்களின் அன்பு சிதைக்கப்படுவது ,விருப்பம் என்னும் பதத்தால் களிம்பு போடப்படுகிறது என்பதால் நாங்கள் ''விருப்பமணம்''என்றே சொல்லுகின்றோம் .இப்பதம் மனிதர்களை பதப்படுத்தும் என நம்புகின்றோம் என்றார் .
எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது .
வார்த்தை மாற்றத்தால் மனங்களை மாற்றமுடியும் எனில் அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என தோன்றியது .
காதலின் மென்மையுடன் .
''அமர்வு '' ,''விருப்பமணம்'' இவ்விரண்டு வார்த்தைகளும் தமிழுக்கு அழகு சேர்க்கும் என நினைக்கின்றேன் .
அன்றாட வாழ்வில் அனைத்து வேலையிலும் இனிய தமிழில் பேசி வந்தாலே , புதுச்சொற்கள் தோன்றி,தோன்றி அன்னைத்தமிழை அழகுடன் வளப்படுத்தும் என்ற நினைப்புடன்
காலை உணவை கனிவுடன் சுவைத்து பறந்தோம் .
உங்கள் திருமணம்
நிச்சயிக்கப்பட்ட மணமா ? அல்லது விருப்பமணமா?
. Download As PDF
Tweet |
|
15 கருத்துகள் :
இம்மாதிரி இன்னும் நிறைய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்யுங்கள்...
"காதலிப்பவர்களே கூட நாங்கள் காதலிக்கின்றோம் என கூற தயக்கம் காட்டுவதை உணர்ந்திருப்பீர்கள் . அந்த அளவிற்கு அந்த வார்த்தை காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படுகிறது "
- real one....
நிச்சியமாக நானும் இனி விருப்பமணம் என்று அழைக்கவே விருப்பம்! நல்ல பதிவு தோழரே!!!!
நல்ல பதிவு
அருமை அண்ணே
அழகான தமிழ் சொற்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
நல்ல தமிழ்ச் சொற்கள் நண்பரே
நல்ல பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
விருப்பமணம்............. அருமை,,,,,,,,,,
இது போன்ற தமிழ் சொற்களை பயன்படுத்தி வரும் உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்...
அன்பின் நண்டு
தமிழ்ச் சொற்கள் அறிமுகம் நன்று - அமர்வு நல்ல சொல் தான் - அதற்கு இருக்கை எனப் பொருள் உண்டு - ஆனால் பொதுவாக அமர்வு என்பது உயர்வான சொல் என நினைக்கிறேன். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து ஒரு பொருளினை ஆய்வு செய்யும் செயலை அமர்வு எனச் சொல்லலாம். இதெல்லாம் என் கருத்து. தெரிந்தவர்கள் பகிரலாம்.
,//''விருப்பமணம்'' என்பது ஒருவரை ஒருவர் விரும்பி மணம் ஒப்பி இல்லறத்தில் ஈடுபடுவது // -
இது காதல் திருமணம்தானா - வேறு பெயரில் அழைக்கப்படுகிறதா ?
" மணம் ஒப்பி " என்பது மனம் ஒப்பி என இருக்க வேண்டுமா ? இல்லறத்தில் ஈடு படுவது திருமணத்திற்குப் பிறகா ? அல்லது மனம் ஒப்பி மணம் புரியாமல் இல்லறம் நடத்துவதா ? குழப்பமாக இருக்கிறது.
அல்லது காதல் திருமணம் - பெற்றோரின் எதிர்ப்புக்கிடையேயும் - நடந்தால் அது விருப்ப மணம் எனச் சொல்ல வேண்டுமா ?
முடிவாக நான் புரிந்து கொண்டது காதல் மணம்
என்பதின் வேறு பெயர் விருப்ப மணம்.
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
விருப்பமணம்..
good one:)
நல்ல பதிவு அண்ணே ..
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
விந்தைமனிதன் @
kannan sabapathy @
நந்தா ஆண்டாள்மகன் @
T.V.ராதாகிருஷ்ணன் @
சசிகுமார் @
அம்பிகா @
VELU.G @
DrPKandaswamyPhD @
செ.சரவணக்குமார் @
வழிப்போக்கன் - யோகேஷ் @
cheena (சீனா) @
கே.ஆர்.பி.செந்தில் @
வானம்பாடிகள் @
வெறும்பய
அவர்களே
மிக்க நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "