வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

செய்வோம் அல்லது செத்துமடிவோம்

"இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' ...

உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர்கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.
இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்! ...


போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்;
அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல...

அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம்...


"செய்வோம் அல்லது செத்துமடிவோம்'' ...

/////////////////////////Lakshmanan Marimuthu
to  me
Subject: Re: செய் அல்லது செத்து மடி!

வீட்டில் உட்கார்ந்துகொண்டு மக்களை உசுப்பிவிடும் தலைவரல்ல மோகன்தாஸ் காந்தி. 
''டூ ஆர் டை'' என்று அவர் கூறவில்லை.
 கரேங்கே யா மரெங்கே (செய்வோம் அல்லது செத்துமடிவோம்) தான் அவரது அறைகூவல்.

காந்தியின் பேச்சுக்கள் சுருக்கமாகவே இருக்கும். 

விதி விலக்குகள் இரண்டு.


முதலாவது 1916இல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை.இரண்டாவது ஆக 8  1942  வெள்ளையனே வெளியேறு முழக்கம். 

...


செய் அல்லது செத்து மடி!

ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே நாளில்தான் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு' (குவிட் இந்தியா) தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதோடு தேசமக்கள் அனைவருக்கும் ஓர் எழுச்சிமிகு அதிரடி மந்திர வாசகத்தையும் வழங்கினார். "செய் அல்லது செத்து மடி' என்று அந்த கொதிப்புமிக்க வீர வாசகமே நாடெங்கும் ஆகஸ்ட் புரட்சியைப் பீறிடச் செய்தது.

1942
ஜூன் இறுதியில் இரண்டாம் உலக யுத்த நெருக்கடி நிலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தைத் திக்குமுக்காடச் செய்தது.

பர்மாவை ஆக்கிரமித்துத் தலைநகர் ரங்கூனைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் இந்தியா - பர்மா எல்லை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்தன.

ஏற்கெனவே சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணடைந்துவிட்டது. மேற்கே, வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமல் தலைமையிலான ஜெர்மானிய நாஜி ராணுவம் எகிப்தைக் கைப்பற்றி கிழக்கு நோக்கி முன்னேறியவண்ணம் இருந்தது.

ஜெர்மன்-ஜப்பான் படைகள் இந்தியாவில் சந்தித்து கைகோத்து வெற்றிகொண்டாடும் என யுத்த விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறினர்.

மலேயா, பர்மா நாடுகளிலிருந்து இந்திய அகதிகள் சாரிசாரியாக இந்தியாவுக்கு ஓடிவந்த வண்ணமிருந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பிரதேசங்களில் கொள்ளைக் கூட்டத்தினரின் அட்டகாசம் பெருகிற்று. பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம் வட்டாரங்களில் தானியப் பற்றாக்குறையால் கடும் பஞ்சம் உருவாகி வந்தது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அபாயம் நிலவியது.

இந்த இறுக்கமான நெருக்கடிச் சூழ்நிலையிலேதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ""இந்தியாவை விட்டு வெளியேறு'' - பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு உடனடியாய் விலக வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக பம்பாயில் ஆகஸ்ட் 7, 8 (1942) தேதிகளில் கூடியது.

அந்தத் தீர்மானத்தை முன்வைத்து மகாத்மா காந்தி முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் ஆற்றிய நீண்ட, உணர்ச்சிகரமான உரை, நம் நாட்டு மக்களை உலுக்கி உறைய வைத்தது. அவ்வுரையின் சில வாசகப் பகுதிகள்:

""
உங்களைச் சோர்வினின்றும் தட்டி எழுப்பி, உண்மையான ஜனநாயக ஆட்சி பெறுவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் முன் பிரஸ்தாபிக்கிறேன்.

போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்; அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல. இயன்ற அளவு தியாகங்களால் உங்களது உறுதி படைத்த வலிமையை நிரூபித்தால் பிரிட்டிஷார் வேறு வழியின்றி நமக்கு சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அகிம்சை ஓர் அசைக்கவொண்ணா கோட்பாடு. ஆனால், நீங்கள் அகிம்சையை ஓர் அரசியல் கொள்கையாக மட்டுமே ஏற்கக்கூடும். கட்டுப்பாடான போர் வீரர்கள் போன்று நீங்கள் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து, அதனின்றும் சிறிதும் பிறழாமல் இந்த இறுதிப் போராட்டத்தில் செயல்படுவீர்களாக.

இம்முறை நான், இந்திய சுயாட்சி, மந்திரிசபை போன்றவற்றிற்காக வைஸ்ராயுடன் பேரம் பேசப் போவதில்லை. பூரண சுதந்திரத்திற்கு எள்ளளவும் குறைவான வேறெதும் என்னைத் திருப்திப்படுத்தாது.

ஒருக்கால் "உப்புவரி நீக்கப்படும், மதுவிலக்கு அமலாகும் மாகாண மந்திரிசபைகளுக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கப்படும்' என்றெல்லாம் கூறி வைஸ்ராய் இறங்கி வரலாம். ஆனால், நான் பிடிவாதமாய்ச் சொல்வேன், "பூரண சுதந்திரத்திற்குக் குறைவான வேறெதும் வேண்டாம்' என்று.

"
இதோ, இத்தருணத்தில் ஒரு மந்திரம், சுருக்கமான தாரக மந்திரம், வழங்குகிறேன். அதனை நீங்கள் இதயத்தில் பதியுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், செயலும் அந்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமையட்டும். அந்த மந்திரம் இதுதான்.

""
செய் அல்லது செத்துமடி'' .

இந்தியாவை விடுவிப்போம், அன்றி அம் முயற்சியில் செத்து வீழ்வோம்! அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம்.

நமது தேசம் அடிமைத்தளையில் கட்டுண்டு அவலப்படுவதைக் காண கணமேனும் பொறுக்க மாட்டோம் என்கிற அசைக்கவொண்ணா வைராக்கியத்துடன், ஒவ்வொரு காங்கிரஸ்காரனும், காங்கிரஸ்காரியும் இந்தப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அதுவே உங்களது சபதமாக இருக்கட்டும்.

"
இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' என்று கடவுளையும் உங்கள் சொந்த உளச்சான்றையும் சாட்சியாகக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள்.

உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர், கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.

இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்!

""
சுதந்திர இந்தியாதான் தன்னிச்சையாக நேச நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு அபாயத்தை முழு வீச்சுடன் எதிர்த்து முறியடிக்க முடியும். ஆனால், இன்றோ இந்தியர்கள் அடிமைத் தளையில் பிணைபட்டு நடைப்பிணங்களாக ஆகிவிட்டனர். மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.

இந்திய மக்கள் ஒளி வீசும் கண்படைத்தவர்களாகப் புத்துயிர் பெற வேண்டுமாயின் சுதந்திரம் இன்றே, இப்போதே வேண்டும்; நாளை அல்ல. ஆகவேதான் உடனடியாய் சுதந்திரம் பெற நாம் உடனடியாய் முனைவோம். அல்லது அம் முயற்சியில் செத்துமடிவோம் என்று சூளுரைப்போம்...''அலைமோதிய ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது.

ஆகஸ்ட் 8 முன்னிரவில் திரும்பவும் கூடிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காந்திஜி இவ்வாறு அறிவுறுத்தினார்:

"
நமது இறுதிப் போராட்டம் இக் கணமே தொடங்கிவிட்டதாகக் கருதக் கூடாது. நீங்கள் அனைவரும் என் கையில் போராட்ட அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள். மேன்மை தங்கிய வைஸ்ராயைச் சந்தித்து காங்கிரஸின் உரிமைக் கோரிக்கையை ஏற்கும்படி மன்றாடுவதே எனது முதல் நடவடிக்கை. அதற்கு இரண்டு - மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை காத்திருங்கள்''.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருக்கவோ காந்திஜிக்கு அவகாசமோ சந்தர்ப்பமோ அளிக்கவோ விரும்பவில்லை.

மறுநாள் (1942 ஆகஸ்ட் 9-ம் தேதி) விடியற்காலை ஐந்து மணி அளவில் காந்திஜியும், பம்பாயிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களும் படுக்கைகளிலிருந்து எழுப்பப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாகவே ரகசியமாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

விடியற்காலையில் காந்திஜி கைதாகும்போது ஒரு சில பத்திரிகையாளர்களே அவ்விடத்தில் இருந்தனர். அவர்கள் மூலம் காந்திஜி இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்த சிலவரிச் செய்தி இதுதான்:

""
அகிம்சை அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவரவர் இஷ்டப்படி மனதொத்த அளவில் செயல்படுவீர்களாக!

ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம் போன்ற இதர அகிம்சை முறைகளைக் கையாளலாம்.

சத்தியாக்கிரகிகள் சாவுக்குத் துணிந்து வெளிவர வேண்டும்.
உயிர் வாழ்வதற்காகப் பின்வாங்கக் கூடாது.

தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும்.

"
கரேங்கே யா மரேங்கே' (செய்வோம் அல்லது செத்துமடிவோம்).''

பூனாவுக்கு அருகில் ஆகாகானுக்குச் சொந்தமான ஓர் தனித்த பழைய அரண்மனையில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி காவலில் வைக்கப்பட்டார்.

சரோஜினி நாயுடு, மீராபெஹன், காந்திஜியின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோரும் அதே அரண்மனையில் காந்திஜியுடன் காவலில் வைக்கப்பட்டனர்.

அன்று மாலை பம்பாயில் காந்திஜி பேசவிருந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசப் போவதாக அறிவித்த காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகாகான் அரண்மனையில் காந்திஜியுடன் சிறைவாசம் தொடங்கினார். (கைதான மறுவாரமே, ஆகஸ்ட் 15 அன்று மகாதேவ் தேசாய் மாரடைப்பால் மரணமடைந்தார்).

அன்றைய தினமே (1942 ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாகாண, மாவட்ட, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தனர்.

அனைத்துக் காங்கிரஸ் குழுக்களும் சட்டவிரோதமானவை எனத் தடை செய்யப்பட்டது; அவற்றின் நிதிகள் முடக்கப்பட்டன. பத்திரிகைகளும் அச்சகங்களும் காங்கிரஸ் இயக்கங்கள் பற்றியோ அதற்கெதிரான அரசாங்க அதிரடி நடவடிக்கைகள் பற்றியோ செய்திகள் வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்து, அதைத் தொடர்ந்து படுகள அடக்குமுறையை அரசாங்கம் அவிழ்த்துவிட்டதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படித்த வகுப்பினர்களும் கொதித்தெழுந்தனர்.

வன்முறை வெடித்தது. காவல் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தபால் நிலையங்கள் தீக்கிரையாயின.

ஆங்காங்கே தந்திக் கம்பிகளை அறுத்தல், ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தல், பாலங்களுக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தல், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்குதல் போன்ற அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின.

அரசாங்கம் போலீஸ் அடக்குமுறையை மென்மேலும் முடுக்கிவிட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைதுகள், தடியடிகள், விசாரணையின்றி சிறைவாசம் மலிந்தன.

அரசாங்கம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் ஆகஸ்ட் புரட்சி வலுவிழந்து, அடுத்த இரண்டே மாதங்களில் பிசுபிசுத்துவிட்டது. தலைமறைவான இடதுசாரி காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்திய ரகசிய இயக்கமும் 1943-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடுக்கப்பட்டுவிட்டது.

1943
நவம்பரில் உடல்நலம் மிகக் குன்றி, படுத்த படுக்கையாக இருந்த கஸ்தூர்பா காந்தி, 1944 பிப்ரவரி மாதம் உயிர்நீத்தார். அன்னாரது உடல், ஆகாகான் அரண்மனை மைதானத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின், காந்திஜி கடும் மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார். அத்துடன் ரத்த சோகையும், குறைந்த ரத்த அழுத்தமும் அவரை வாட்டின.

""
மிஸ்டர் காந்தியின் உடல்நிலை மிகவும் குன்றிவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் அவர் இல்லை. சிறைக் காவலில் அவர் மாண்டு போனால் மக்களிடையே அரசாங்கத்திற்கு விரோதமான உணர்வு மேலோங்கும்,'' என்று வைஸ்ராய் லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதன் விளைவாக, காந்திஜியை "உடல்நிலை காரணமாக' விடுவிக்க, 1944 மே 6-ஆம் தேதி வைஸ்ராய் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி மிக்க மன - உடல் சோர்வுடன் வெளியே வந்தார். அதுவே அவரது கடைசி சிறைவாசம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1945 ஜூன் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

1944
ஜூலை 28 அன்று காந்திஜி வெளியிட்ட அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறினார்:

""...
பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது உட்பட நாச வேலைகள் அனைத்துமே வன்முறைச் செயல்களே ஆகும். "நடந்து போன அத்தகைய செயல்கள் மக்களின் மனத்தையும் ஆர்வத்தையும் உணர்ச்சிகரமாக உத்வேகித்தன' என்றெல்லாம் என்னிடம் பலர் எடுத்துக்காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள் நமது தேசிய இயக்கத்திற்கு தீங்கு விளைவித்துவிட்டன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை''.

ஆம்! ஆகஸ்ட் புரட்சியின் சில விளைவுகள் அரசியல் களத்தில் காங்கிரஸிக்குப் பாதகமாகவே அமைந்தன.

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் (1942-1945) காங்கிரஸ் தடை செய்யப்பட்டுச் செயலிழந்து கிடந்தது. தலைவர்கள் சிறையில் இருந்தனர். அதன் நிதிகள் முடக்கப்பட்டுவிட்டன. நடைமுறையில் காங்கிரஸ் ஸ்தாபனம் நிலைகுலைந்து ஸ்தம்பித்துவிட்டது எனலாம்.
...


 M.Lakshmanan.நண்பர் லட்சுமணன் மாரிமுத்து அவர்கள் எனக்கு அனுப்பிய மின் மடலில்  சில வாசகப் பகுதிகள் உங்களின் பார்வைக்கு  ... சுதந்திர தின நினைவாக ... அவ்வளவே...

நன்றிகள் : Lakshmanan Marimuthu  மற்றும்  Sankara Narayanan அவர்களுக்கும்.


.
Download As PDF

19 கருத்துகள் :

unknown சொன்னது…

வணக்கம்
சரியாய் சொன்னீர்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

சக்தி கல்வி மையம் சொன்னது…

ம்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரிவான விளக்கம்... நன்றி...

வாழ்த்துக்கள்...(TM 3)

பொன் மாலை பொழுது சொன்னது…

அதெல்லாம் சரிதான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு தலைவனில் பின்னால் இந்த நாடு அணி திரண்டிருந்தால் இன்று இந்தியா என்ற ஒரு நாடு ஜெர்மனி, அமேரிக்கா போல ஒரு உண்மையான வல்லரசாகவே இருதிருக்கும்.
என்னை பொறுத்த வரை காந்திஜி ஒரு மோசமான சுயநல போர்வழி.
மொத்த நாட்டையும் நேருவிடம் அடகு வைத்தார்.இன்று அதன் பலன்களை நாம் தினமும் அனுபவிக்கிறோம்.

Admin சொன்னது…

காந்தி நல்லவரா கெட்டவரா என்பது வேறு. அவரது கொள்கை மனித இனத்துக்கு ஆரோக்கியமானது என்பதில் மாற்றில்லை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சுதந்திரம் உண்மையாக கிடைத்து விட்டதா? டெல்லியில் இருந்து ஒரு வெள்ளை ஆட்சி நாட்டில் நடந்து வருகிறதே...?

MARI The Great சொன்னது…

//
MANO நாஞ்சில் மனோ said...
சுதந்திரம் உண்மையாக கிடைத்து விட்டதா? டெல்லியில் இருந்து ஒரு வெள்ளை ஆட்சி நாட்டில் நடந்து வருகிறதே...?
//

ஹி ஹி மனோ அண்ணே நீங்க பஹ்ரைன்ல இருக்குற தகிரியமா? :)

Yaathoramani.blogspot.com சொன்னது…

மகாத்மா காந்தி அவர்களின் எழுச்சிமிக்க உரையை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

இரண்டாம் உலகப் போரின் சூழலும் காலனியாதிக்கத்தின் முதல் குரலாக மூன்று தச ஆண்டுகளான போராட்டமும் இந்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தது.ஒரு புறம் ஆயுதப் போராட்டமும் இன்னுமொரு புறம் காந்தியம் என்ற புதிய சிந்தனையில் காலங்களைக் கடந்து காந்தியின் அகிம்சை வெற்றி பெற்றதையே உலகம் இன்றளவும் நினைவில் கொள்கிறது.

இன்னும் பல நூற்றாண்டிற்கும் காந்தி என்ற பெயர் நினைவில் நிற்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

வரலாறு பேசுமிடத்தில் வரலாற்று சுவடுகள் இருக்கத்தான் செய்யும்:)

மனோ தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பின்னூட்டம் போட்டிருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உலகத்துக்கு அகிம்சை என்ற ஆயுதத்தை உருவாக்கித் தந்தவர் காந்தி. காந்தியைப் பற்றி சரியான புரிதல் இன்று இல்லாதது வருந்தத் தக்கது.இந்தியர் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு.

Unknown சொன்னது…

அன்றைய சூழலையும்,அனைத்துத் தரப்பட்ட மக்களின் மனநிலையயும், எதிர்பார்ப்பையும் சமாளிக்க மகாத்மா மிகவும் சிரமப்பட்டார் என்றே தெரியவருகிறது!

அன்று இருந்த சுழ்நிலையில் மகாத்மா நடந்து கொண்ட விதத்தை இன்று உள்ள சூழலோடு ஒப்பிட்டு பழித்துத் தூற்ற ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது!

இது போன்ற கட்டுரைகள் தூற்றுக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை!

P.S.Narayanan சொன்னது…

சுபாஸ் போஸ் வசம் இந்தியா சென்று இருந்தால் இந்திய நாடு அமேரிக்கா ஜெர்மெனி மாதிரி வல்லரசு ஆகி இருக்கும் என்று கூறுபவர்கள் கலாம் ஐயரின் பங்காளிகள். பாசிச வெறியர்கள்.

ஜெயமோகனின் ''காந்தியின் மூன்று துரோகங்கள்'' கட்டுரையைப் படித்தால் ஏன் அவர் போசை ஓரம் கட்டினார் என்பது புரியும்.

1920களிலேயே இளைஞர்களிடம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டார் மோகன்தாஸ். திரு மாணிக்கம் போன்றே அவர்கள் பெரிய படை சாம்ராஜ்யம் என்ற சொற்களைக் கூறினர். சுருக்கமாக வெள்ளையரில்லாமல் வெள்ளையர் ஆட்சியை விரும்பிகிறீர்கள் என்று காந்தி நகையாடினார்.

காந்தி இல்லாத காங்கிரஸ் இந்து வெறித்தனத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. தீவிரமான கொள்கை வேறுபாடுகளுக்கு இடையில் (போள்ஸ் அபார்ட்) நேருவை எதற்கு வாரிசு ஆக்கினார் என்பதற்கு முக்கிய காரணம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் காக்கத்தான்.

காந்தியைப் படிக்காமலேயே அவரை விமிரிசனம் செய்வது, அவரைத் தெய்வமாக்குவது அல்லது சைத்தான் ஆக்குவது நமக்குக் கைவந்த கலை. உண்மையான காந்தியை அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்: ''The Life of Mahatma Gandhi'' by Louis Fischer; Harper Collins publishers. விலை ரூ 400.

சுபாஸ் போஸ், நேரு போன்ற தலைவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் மோகன்தாஸ் காந்தி ஒரு யுக புருஷன்.

காந்தியை இந்திய சுதந்திரத்துடன் மட்டும் இணைப்பது ஒரு பெரிய அநீதி. காந்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவின் சுதந்திரம் நிறுத்த முடியாதது. ஹிட்லரும் இந்திய விடுதலைக்கு ஒரு காரணம்.

காந்தியின் சிறப்புத்தான் என்ன! சிம்பிள் லிவிங் ஹை திங்கிங், பொதுவாழ்வில் தூய்மை போன்றவை அவரது கண்டுபிடிப்புக்கள் அல்ல. அகிம்சா வழியில் (Non -violent means for political ends) பொதுப் பிரச்சனைகளுக்கு தனி மனிதர் பிரச்சனைகளுக்கு போராட முடியும் என்பதை உலகில் முதலில் கூறிய நடத்திக் காட்டிய பெருமைதான் காந்தியின் சிறப்பு. அதை மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றோர் பின் பற்றினர். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதை அறியவில்லை. நாம் கோழைகள் எனவே நாம் காந்தியை மறந்து வல்லரசு வேட்டையில் இறங்கி உள்ளோம்.

சங்கரநாராயணன்

சின்னப்பயல் சொன்னது…

தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும்.

rajamelaiyur சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ...

சசிகலா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வரலாற்று நினைவுகள் அருமை! சிறப்பானபகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

http://thalirssb.blogspot.in

மகேந்திரன் சொன்னது…

காந்தீயம் பற்றிய மாற்றுக்கருத்து இருந்தாலும்...
அன்றைய மக்களின் மனங்களை ஒன்றாய் இணைத்தவர்
என்ற பெருமைக்காக அவருக்கான
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

சிகரம் பாரதி சொன்னது…

Wow. Nice post. Super boss. Nam indiya ilangai naadugalukku meendum oru sudhandhirap puratchi thevaip padugiradhu. "congress veliyeru?????"

appadiye namma thalaththukkum vaangalen?
http://newsigaram.blogspot.com

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "